நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூட்யூப் தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் அளித்த சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாகவே வந்து வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். அதன்படி சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. முதலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை என்பது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும், அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகவே உள்ளது. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்ற முறையில் சவுக்கு சங்கர் குறித்து சொல்லணும்னா, மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். எந்தவொரு விஷயத்தையும் ஆராயாமல் பேசமாட்டார். தெரியும்ன்னா தெரியும்..தெரியாதுன்னா தெரியாதுன்னு தான் சொல்வாரு. அப்புறம் எதையுமே பூசி மெழுக மாட்டார். தன்னுடைய மனதில் என்ன தோணுதோ அதை அப்படியே பேசி விடுவார். அதேபோல ஒரு சார்பா எப்பவும் பேசமாட்டாரு.
எது நியாயமோ, அந்த நியாயம் பக்கம் தான் நிற்பார். இப்படி அவரை பத்தி சொல்லணும்னா பல விஷயம் சொல்லலாம். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். ஆயிரம் வருஷம் அசிங்கமா வாழ்றதை விட ஒருநாள் சிங்கமா வாழந்துட்டு செத்துப்போயிறணும்ன்னு சொல்லுவார். அந்த வார்த்தைக்கு பொருத்தமா என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த ஒரு ஆள் சவுக்கு சங்கர் தான். இன்னைக்கு நடந்த சம்பவத்துல வேற யாராவது மாட்டியிருந்தா நீதிமன்றத்துல போய் என்ன சொல்லிருப்பான்.
நான் சொன்னது ஒன்று. நீங்கள் புரிந்து கொண்டது ஒன்று. அப்படி இல்லன்னா மன்னிப்பு கடிதம் கொடுத்திருப்பான். அப்படியும் இல்லன்னா நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரியில போய் படுத்திருப்பான். ஆனால் சொன்ன வார்த்தையில் இருந்து இந்த சூழ்நிலையில கூட பின்விளைவுகள் என்னன்னு தெரிஞ்சும் மாறாம நின்னாரு. அதனால் தான் அவர் மக்கள் மத்தியில் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். இப்படிப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஆதரவா அவர் கூட இருக்கிறது தான சரியாக இருக்கும் என தெரிவித்து We support savukku shankar என கூறியுள்ளார்.