ஜெயிலர் பட வெளியீட்டுக்கான பணிகள் தொடங்கியது முதலே இணைய சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் - ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையேயான ட்விட்டர் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களாக ஜெயிலர் திரைப்படம் பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை வம்பிழுக்கும் வகையிலும் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்து வந்த நிலையில், தற்போதைய ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளையும் கண்டபடி கேலி செய்து பதிவிட்டு வருகிறார்.
மேலும் யூட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் ஜெயிலர் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள், வசூல் நிலவரம் பற்றி பதிவிட்டு வரும் விமர்சகர்கள் தொடங்கி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் வரை, அனைவரையும் போட்டுத் தாக்கி பதிவிட்டு வருகிறார்.
இவற்றின் தொடர்ச்சியாக இன்று ப்ளூ சட்டை மாறன் தான் நடிகர் ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் அவரது இணைய ரசிகர்களுடன் சந்தித்ததாகவும், அப்போது சில கசப்பான சம்பவங்கள் நடந்ததாகவும், இச்சம்பவம் பற்றிய வீடியோவை தான் காலை 11 மணிக்கு ஷேர் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் பட வெளியீட்டைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது தன் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவர் இமயமலைக்கு புறப்படுவதற்கு முன்னர் தான் சந்தித்ததாகவும், நடிகர் ரஜினியின் நம்பிக்கைக்குரியவரும் மூத்த பத்திரிகையாளருமான ஒருவரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
“உங்கள் இணையதள வசை வார்த்தைகள், விமர்சனங்களால் ரஜினிகாந்த் கடுப்பில் இருக்கிறார், அதனால் உங்களை இந்த சந்திப்புக்கு அழைக்கிறோம்” என மூத்த பத்திரிகையாளர் என்னிடம் கூறினார். ஆனால் இந்த சமயத்தில் நான் ரஜினிகாந்தை சந்திக்க விரும்பவில்லை. “உங்களைப் போன்ற சமூக வலைதளவாசிகளின் முன் நான் அவரை சந்திக விரும்பவில்லை” எனக் கூறினேன்.
“ஆனால் பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிடலாம், தலைவர் மிகவும் அன்பான இதயம் கொண்டவர்” என சொல்லி என்னை அழைத்தார்கள், “கூட்டத்தில் கலந்து கொண்டு எங்களுடன் சில நிமிடங்கள் செலவிடுங்கள். நீங்கள் சங்கடமாக உணர்ந்தால், எந்த நேரத்திலும் கூட்டத்தை விட்டு வெளியேறலாம்'” என அவர் கூறிய நிலையில் நான் ஒரு நிபந்தனையின் பேரில் கூட்டத்துக்கு வருகிறேன் என்றேன்.
“சந்திப்பின் முக்கியமான மொமண்ட்களை நான் ஃபோனில் ரெக்கார்ட் செய்வேன்” என கண்டிஷன் போட்ட நிலையில், ரஜினிகாந்த் தனிப்பட்ட மீட்டிங்கில் மொபைல் கொண்டு வருபவர்களை சந்திக்க மாட்டார் என அந்த பத்திரிகையாளர் கூறினார்.
“அப்படி என்றால் என்னால் வர முடியாது” என நானும் மன்னிப்புகோரி முடித்துக் கொண்டேன். அதற்குப் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைப்பு வந்தது. “ரஜினிகாந்த் உங்கள் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டார் ஆனால் எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்யாதீர்கள், சில முக்கியமான தருணங்களை மட்டும் பதிவு செய்து கொள்ளுங்கள் “ என்றார்.
மேலும், நீங்கள் இந்த வீடியோவை பொதுத் தளத்தில் பகிர மாட்டேன் என நீங்கள் உறுதி அளித்து பேப்பரில் கையொப்பமிட்டு தர வேண்டும் என்றும் கூறினார்.
நான் சரி, இன்று சந்திப்போம் என்று கூறி அங்கு சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போலவே சில கசப்பான சம்பவங்கள் இந்த சந்திப்பில் நிகழ்ந்தன. அதனால் நான் என் சத்தியத்தை உடைக்கப் போகிறேன்.
இந்த வீடியோவை இன்று காலை 11 மணிக்கு இங்கு ரிலீஸ் செய்கிறேன். நான் இதன் பின்விளைவுகளை சந்திக்கத் தயாராக உள்ளேன். நான் என்றுமே நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற நபர்களை நம்புகிறேன், நீங்கள் வீடியோ பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
எதிர்பாராத ட்விஸ்டுகளைக் கொண்ட இந்த வீடியோவைப் பார்க்க தயாராகுங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.
ஜெயிலர் பட விவகாரத்தில் தொடர்ந்து இணையத்தில் ப்ளூசட்டை மாறன் நெகட்டிவ் கருத்துகளை முன்வைத்து பேசுபொருளாகி வரும் நிலையில் இந்த ட்வீட் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.