இரவின் நிழல் படம் இன்று அமேசான் பிரைமில் ரிலீசாகியுள்ள நிலையில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியான இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இரவின் நிழல் படம் தான் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 






ஆனால் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் fish and cat என்ற படம் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றும், இரவின் நிழல் இல்லை என்றும் தெரிவித்து பார்த்திபனை குற்றம்சாட்டினார். இதற்கிடையில் இரவின் நிழல் படம் இன்று ஓடிடியில் வெளியானது. பல முறை இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், இன்று காலை தனக்கு கூட தெரிவிக்காமல் அமேசானில் படம் வந்துவிட்டதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.






அதேசமயம் முறையான அறிவிப்போடு வந்திருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தையும் வீடியோ வாயிலாக அவர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதிலும் கூட உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல்தான் என அவர் கூறியிருந்தார்.


ஆனால் அமேசான் ப்ரைம்  தனது தளத்தில் இப்படம் உலகின் 2வது நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தெரிவித்து இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 






மேலும் தியேட்டரில் இரவின் நிழல் படத்தின் கதைக்குள் செல்வதற்கு முன் காட்டப்படும் மேக்கிங் காட்சிகள் இடம் பெறவில்லை. இதனை குறிப்பிட்டு பலரும், சமூக வலைத்தளத்தில் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும் என தெரிவித்து அமேசான் தளத்தில் இடம் பெற்ற இரவின் நிழல் படம் குறித்த ஸ்க்ரீன்ஷாட்டுகளை பகிர்ந்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பார்த்திபன் என்ன சொல்லப் போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.