கெளதம் வாசுதேவ் மேனனின் லவ் டச் படங்களுக்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே உண்டு. காதல் படங்களில் எவ்வளவு ஸ்ட்ராங்கோ அதேபோல, மாஸ் திரைப்படங்களை அதிரடியாக கொடுப்பதிலும் வல்லவர் கெளதம் மேனன். தன்னுடைய முதல் படமான காக்க காக்கவும் ஒரு மாஸ் அண்ட் க்ளாஸ் சினிமாகவே கொடுத்திருப்பார். அந்த வரிசையில் கெளதம் மேனனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கெளதம் மேனனுக்கு மட்டுமல்ல கமல்ஹாசன், ஹாரிஸ் ஜெயராஜ் என வேட்டையாடு விளையாடு படத்தில் அனைவருமே ஜொலித்தனர். விறுவிறுவென செல்லும் திரைக்கதை, நுனிசீட்டில் அமர வைக்கும் க்ரைம் த்ரில்லர், ஃபீல் குட் காதல் காட்சிகள், ரசிக்க வைக்கும் பாடல்கள் என எந்த இடத்திலும் குறை வைக்காமல் நம்மை கடத்திக் கொண்டு போகும் திரைப்படம்.




'கற்க கற்க' பாடல் முதல் க்ளைமேக்ஸ் காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வே இல்லாமல் செல்லும் திரைக்கதையே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். எத்தனை முறை பார்த்தாலும் இன்றும், வேட்டையாடு விளையாடு முழு படத்தையும் அலுப்பு தட்டாமல் அமர்ந்து பார்க்க முடியும் என்பதே அதன் எவர் கிரீன் மொமண்ட். ஒவ்வொரு தரப்பினருக்கும் பிடிக்கும் பல காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்க சில காட்சிகள் அனைவருக்குமே பேவரைட் லிஸ்டில் இருக்கும். அதில் முக்கியமானது முதல் காட்சியான 'கண்ணு வேணும்னு கேட்டியாமே' சீன். கமலின் மொத்த கெத்தையும், மாஸையும் அந்த ஒரு காட்சி மூலமே கெளதம் சொல்லி இருப்பார். மாஸில் தட்டித்தூக்கும் அந்தக்காட்சி இன்றும் தமிழ் சினிமாவின் சூப்பர் சீனில் ஒன்றுதான். 


அதேபோல பால்கனி காட்சி. இறந்த மனைவியின் நினைவுகளை ஜோ கிளற, அமைதியாக பால்கனி கைப்பிடியை பிடித்துக்கொண்டு ’’யெஸ்.. ஐ மிஸ் ஹெர்’’ என கமல் கூறவும், பின்னால் ஒலிக்கும் பிஜிஎம்மும் என்றுமே சலிக்காத காட்சி. குறிப்பாக’’காலம் எல்லாத்தையு சரி செய்யும்’’ என சொல்லி முடிக்கும் கமல், பார்க்கும் அனைவருக்குமே பெரிய ஆறுதல் மருந்தை தருவதாக இருக்கும். யார் எந்த சோகத்தில் இருந்தாலும் அந்தக்காட்சி ஒருவித ஆறுதலை தருவதை இன்றும் உணரலாம்.




அதேபோல நடுரோட்டில் திருமண விருப்பத்தை குழப்பத்தில் சொல்லும் ஜோதிகாவும், அதனை எளிதாக உள்வாங்கும் கமலும், ’ஹவ் க்யூட்’ சீனை தந்திருப்பார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ’’இந்த செகண்ட்ல இருந்து நீயும், மாயாவும் என் சொத்து’’ என கூறும் கமல் கூறும் டயலாக் கூஸ்பம்ப் மொமண்ட்.


காமலினி முகர்ஜியிடம் பார்த்ததும் கமல் காதலை சொல்லும் காட்சி, ரிங்டோனாகவே பலரது செல்போனிலும் ஒலித்து தீர்ந்த காலமும் உண்டு. அந்தளவுக்கு டயலாக்கும், இசையும் கவிதையாகவே இருக்கும் அந்தக்காட்சியில்.


இப்படியான பல காட்சிகளை அவரவர்களின் ரசனைக்கு குறிப்பிட்டு கூற முடியும். குறைவான நேரமே வந்தாலும் காதலால் நிறைய வைக்கும் காமலினி முகர்ஜி, அன்பின் வலியை அழுந்த பதிய வைக்கும் பிரகாஷ்ராஜ், ஒரு சப்போர்ட் கதாபாத்திரமாக வந்தாலும் இறந்துவிட்டாரே என ஏங்க வைக்கும் வெளிநாட்டு போலீஸ் ஆண்டர்சன், முழு வில்லத்தனத்தையும் வெளியிட்டு பார்ப்பவர்களின் கோபத்தை நிபந்தனையில்லாமல் வாங்கிக்கொள்ளும் டேனியல் பாலாஜியும், சலீமும், உள்நாட்டையும், வெளிநாட்டையும் கண்களுக்கு விருந்தாக்கும் ரவி வர்மன், பாடலிலும் பின்னணி இசையிலும் தனித்து நின்ற ஹாரிஷ் என படம் முழுக்க பலரும் தங்களுக்கான வேலையை வேற லெவல் எனப் பாராட்டும் விதத்திலேயே கொடுத்திருப்பார்கள்.




இதேநாள் 15 வருடங்களுக்கு முன்பு திரையில் வெளியான வேட்டையாடு விளையாடு இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் என்றும் பசுமை ரகமே. காதல் படம், நடிப்பு, இடைவெளி என சற்று ஒதுங்கிச் செல்லும் கெளதம் மேனன் வேட்டையாடு விளையாடு மாதிரியான ஒரு படத்தை திரும்ப தர வேண்டுமென்பது அவரின் மாஸ் க்ளாஸ் பக்க ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.