'விருது என்பது ஒருவரின் விடாமுயற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைக்கும் ஒருவித அங்கீகாரமாகும்'. இதற்கேற்ப யூடியூப் மற்றும் பிற டிஜிட்டல் தளத்தில் உள்ள திறமைவாய்ந்த படைப்பாளிகளை கவுரவிக்க வழங்கப்படுவதே பிளாக்ஸீப் டிஜிட்டல் விருதுகள். இவ்விழாவானது 2020ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிளாக்ஸீப் குடும்பத்தால் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டின் பிளாக்ஸீப் டிஜிட்டல் விருதுகள் மார்ச் 6ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் திரைத்துறையை சேர்ந்த இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, பார்த்திபன், சிம்புதேவன், வசந்த், ஞானவேல் மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசாந்த், அருண்விஜய், ரேகா, விமல், ராம்கி, இவர்களுடன் இசையமைப்பாளர்கள் தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹிப் ஹாப் ஆதி, விஜய் ஆண்டனி ஆகிய முக்கிய திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஓடிடி தளத்தின், கிரிட்டிகலி அக்கிளைம்டு மூவீ (விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படம்) விருதை மண்டேலா திரைப்படத்திற்காக இயக்குனர் மடோன் அஸ்வின், சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜெய்பீம் படத்தின் நடிகர் மணிகண்டன், இந்த ஆண்டின் சிறந்த எடிட்டர் விருதை சார்பேட்டா திரைப்படத்தின் எடிட்டர் ஆர்.கே.செல்வா, இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளருக்கான-பஞ்சு அருணாச்சலம் விருதை இயக்குனர் சிம்புதேவன் ஆகியோருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மற்றும் யூடியூப் தளத்தின், பிடித்த பாடலாசிரியர் டிஜிட்டல் விருதை சிவகார்த்திகேயன், இந்த ஆண்டின் வைரலான பாடல் சிறப்பு குறிப்பீடு விருதை 'ஜொர்த்தலே', இந்த ஆண்டின் வைரலான பாடல் விருதை 'என்ஜாயீ என்சாமி' ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு விருதான, இத்தசாப்தத்தின் டிஜிட்டல் ஐகான் எனும் விருதை தன்னுடைய இசையால் பலரின் மனதை கவர்ந்த யுவன் சங்கர் ராஜாவுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து சிறந்த திரைப்படத்திற்கான விருதை முனைவர் தொல்.திருமாவளவன் வழங்க ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் பெற்றுக்கொண்டார். 'சமூகநீதியை நிலைநிறுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வெளியுலகிற்கு கொண்டுசேர்த்து, ஓர் படத்தின் மூலம் ஓர் அரசையே இயக்கமுடியும் என்பதை ஜெய்பீம் படத்தினால் நிருபித்த இயக்குனர் ஞானவேல் அவர்களின் ஞானம், வேலை போன்று கூர்மையானது' என தொல்.திருமாவளவன் கூறினார்.
இதைத்தொடர்ந்து பிடித்த விவசாய சேனல் விருதை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழங்க 'பசுமை விகடன்' குழு பெற்றுக்கொண்டது. இதையடுத்து சிறந்த கல்வி சார்ந்த சேனல் விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்க 'கிராக் வித் ஜாக்' குழு பெற்றுக்கொண்டது. இதன்பின் பிடித்த இன்போர்மேசன் சேனல் விருதை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்க மதன் கௌரி பெற்றுக்கொண்டார். ஆர் ஜே விக்னேஷ்காந்த் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.