தமிழ்நாட்டின் பிரபல யூ டிபர்களில் ஒருவர் டிடிஎப் வாசன். இவர் தனது இரு சக்கர வாகனம் மூலமாக சாலைகளில் வேகமாக செல்வதும், பல ஊர்களுக்கு செல்வதையும் வீடியோவாக எடுத்து யூ டியூபில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக, இவர் தமிழ்நாட்டில் பிரபலமானார்.


விபத்தில் சிக்கிய டி.டி.எப். வாசன்:


தனது இரு சக்கர வாகனம் மூலமாக சாலையில் இவர் அவ்வப்போது சாகசங்களை செய்து வந்தார். காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில், டி.டி.எப். வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.


சரியாக, பாலுசெட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது தனது பைக்கில் வீலிங் செய்ய முயற்சித்தார். அப்போது, அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முற்பட்டதால், பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பைக் சில அடி தூரம் சாலையில் பறந்து சென்றது. இதில், டி.டி.எப். வாசன் சாலையோரம் இருந்த புதரில் கீழே விழுந்தார்.


எலும்பு முறிவு:


இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எப். வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. தற்போது, அவருக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.


சாலைகளில் அதிவேகமாக செல்லும் டிடிஎப் வாசனை பல முறை பலரும் கண்டித்தும், விமர்சித்தும் வந்த நிலையில் அவர் தொடர்ந்து இதேபோல இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில், அவர் விபத்தில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிடிஎப் வாசன் தற்போது செல்அம் என்ற இயக்குனர் இயக்கி வரும் மஞ்சள்வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


டிடிஎப் வாசனின் ஆபத்தான பைக் சாகசங்களால் பல இளைஞர்களும் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ள நிலையில், அவருக்கு என்று சில சிறுவர்களும் இளைஞர்களும் ரசிகர்களாக உள்ளனர். இந்த நிலையில், டிடிஎப் வாசனின் விபத்து அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.