ஜி பி முத்துவின் சின்ன சின்ன ஆசைகள். .
இன்றைய சூழலில் டிக்,டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்துச் சமூக வலைதளங்களில் இருந்தும் பல திறமையான நபர்கள் வைரலாகி திரைத்துறைக்கு சென்றுள்ளார்கள். மிக சாமானியர்களாக நம் கண் முன் இருந்த பலர் இன்று புகழ்பெற்றவர்களாக மாறி வருவதை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். அதே நேரத்தில் பெரிதும் கவனிக்கப்படாமல் இருந்தபோதே நாம் ரசித்துப் பார்த்து வந்த இந்த கலைஞர்கள் புகழ் அடைந்தபின் ஏனோ நம் மனதிலிருந்து விலகியும் விடுகிறார்கள்.
நம்மில் ஒருவராக இருந்த வரையில் இவர்களிடம் நாம் உணர்ந்த நெருக்கம் ,புகழடைந்த பின் இவர்களை நம் மனதிற்கு நெருக்கமானவர்களாக உணரமுடியாமல் போய்விடுகிறது. ஆனால் இதற்கு விதிவிலக்கு என்றால் ஜி பி முத்துவை கூறலாம். சின்ன சின்ன நகைச்சுவையான வீடியோக்களில் தொடங்கி பிக்பாஸிற்குள் சென்று , பல திரைப்படங்களில் நடித்தப் பின்னரும் ஆரம்பகாலத்தில் அவரைப் பார்த்து ரசித்து முடிந்த அளவிற்கே இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் அவர்.
அவரை இன்றும் நம்மில் ஒருவராக உணர முடிவதே இதற்கான காரணம். ஜி.பி.முத்துவிற்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் நல்லதோ கெட்டதோ அதை நாம் நம்மில் ஒருவருக்கு நடப்பதாகவே உணர்கிறோம். ஜிபி முத்துவின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் நாம் அவருடன் இருந்திருக்கிறோம். அதில் சில முக்கியமான நிகழ்வுகள் என்றால் இவற்றை சொல்லலாம்.
திரைப்படங்களில் ஜி பி முத்து
இன்று வெளியாகும் திரைப்படங்களில் ஜி.பி.முத்துவை எதிர்பார்த்து ஒரு பெரிய கூட்டம் உருவாகி இருக்கிறது. சற்று நேரமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும் திரையில் தனது ரசிகர்களால் மிக உற்சாகமாக வரவேற்கப்படுகிறார் ஜி.பி முத்து. அதே நேரத்தில் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் நிகழ்வில் ஜி.பி.முத்து அவமானப்படுத்தப்பட்டார் என அறிந்தபோது அவரது ரசிகர்கள் பெரிதும் ஆவேசமடைந்தனர்.
பிக் பாஸ்
பிக்பாஸில் ஜி.பி.முத்து போட்டியாளராக உள்ளார் எனத் தெரிந்தபோது நிச்சயம் அவர்தான் வெற்றிபெற வேண்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்தோம். பிக் பாஸ் வீட்டினுள் ஜி.பி.முத்து கண் கலங்கிய வீடியோ பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது. தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் வெளியேறியபோது அவரது பாசத்தை புரிந்துகொண்டு அவரது முடிவை மக்கள் வரவேற்றார்கள்.
புது வீடு , தந்தைக்கு புது ஸ்கூட்டர்
அண்மையில் ஜி.பி.முத்து புதிதாக சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்தார். அந்தக் காணொளியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.அப்போது முத்துவின் ரசிகர்கள் மிக உற்சாகமாக அவரை வாழ்த்தி பதிவிட்டனர் . தற்போது ஜி.பி.முத்து தனது தந்தைக்கு புதிதாக ஸ்கூட்டர் ஒன்றை பரிசாக வாங்கி தந்துள்ளார். இந்த வீடியோவை தந்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜி பி முத்து.
இந்த செயலுக்காக அவரை பாராட்டி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். ஒரு சாதாரண கார்பெண்டராக இருந்து குளத்தடியில் அமர்ந்து கடிதங்கள் படித்துக் கொண்டிருந்த ஜிபி முத்து இன்று தமிழ் நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார். தனது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி அதனை உணர்வுப்பூர்வமாக பதிவிடும் ஜிபி முத்துவுக்கு எப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பார்கள்.