விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக அஸீம் டைட்டிலை வென்றார். எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி மேடை வரை வந்து மக்கள் மனங்களை வென்றவர் விக்ரமன்.


 



பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அரசியல்வாதி :


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகக் களமிறங்கினார் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் தொகுப்பாளரான விக்ரமன், திருநெல்வேலியில் பிறந்து தேனியில் வளர்ந்தவர். சிறு வயது முதலே அம்பேத்கர் மற்றும் பெரியார் கொள்கைகளை உள்வாங்கி வளர்ந்தவர்.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வீட்டில் இருக்கும்போதே தனது கருத்துகளை ஆணித்தரமாக முன்வைத்து நியாயமாகக் குரல் எழுப்பிய அவருக்கு ஏராளமான ஃபேன்களும் ஃபாலோயர்களும் உருவெடுத்தனர். பலரும் விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராவார் என ஆணித்தரமாக நம்பினர். ஆனால் அவரின் அரசியல் பின்புலமே அவரின் வெற்றியை தடுத்ததாகக் கூறப்படுகிறது.    


யூடியூப் தொடங்கிய விக்ரமன் :


இந்நிலையில், பிக் பாஸ் விக்ரமன் தற்போது அடுத்த அடியை எடுத்து வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். தனக்கென ஒரு தனி யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார் விக்ரமன். இதன் மூலம் அவர் பேச நினைக்கும் விஷயங்கள், மக்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கும் கருத்துக்கள் உள்ளிட்டவற்றைப் பகிர ஒரு அடித்தளமாக யூடியூப்பை பயன்படுத்த விக்ரமன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


 






ட்விட்டர் மூலம் அறிவிப்பு :


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் விக்ரமனுக்கு நண்பர்களான சக போட்டியாளர்களான ராம், ஏடிகே மற்றும் ஷிவின் மூவருடன் இணைந்து விக்ரமன் யூடியூப் சேனல் தொடங்கும் நோக்கத்தைப் பற்றியும், அறிவிப்பை பற்றியும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.


விக்ரமனின் தீவிர ரசிகர்களுக்கு அவரின் இந்த புது தொடக்கம் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. விக்ரமன் தன் நண்பர்களின் அட்வைஸ் படி இந்த யூடியூப் சேனலை யாருடனும் கூட்டணி சேராமல் சோலோவாக நடத்த முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், விக்ரமனின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.