‘பிக்பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் வாரம் முதல் கடந்த வாரம் வரையில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி என நான்கு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் இரண்டாவது வாரம் தொடக்கத்தில் உடல் நிலை ஒத்துவராத காரணத்தால் பவா செல்லதுரை பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்னபாரதி என ஐந்து போட்டியாளர்கள் அதிரடியாக வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியானர்கள். இதை சற்றும் எதிர்பாராத மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆடிப்போனார்கள்.
கடந்த வாரம் அதிரடியாக இரண்டு பேரை வெளியேற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வேறு ஒரு ட்விஸ்ட் நடைபெற்றுள்ளது. எல்லை மீறி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, மிரட்டுவது என தினசரி ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி சக போட்டியாளர்களை நோகடிக்கும்படி தனது கேமை விளையாடுவது என பல பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாக இருந்த பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் வெளியேற்றம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும் பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் சக போட்டியாளர்களுடம் மல்லுக்கு நின்றவர் அசீம். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் சக போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுக்காமல், தரக்குறைவாக பேசுவது, ஒருமையில் பேசுவது, தற்பெருமை பேசுவது, மற்றவர்களை கீழ்மை படுத்துவது என பல செயல்களில் அசீம் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசனையே கடுப்பேற்றியவரும் கூட.
அசீமின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் இரண்டு முறை ரெட் கார்டு வழங்கப்பட்டது. அதற்கு பிறகு அசீம் செயல்படுவது மக்கள் ரசிக்கும்படிதான் உள்ளது என்ற மனநிலை மக்களுக்கு ஏற்பட்டதோ என்னவோ தெரியவில்லை இறுதிப்போட்டியில் அசீம் வாக்குகளைக் குவித்து டைட்டில் வின்னராகவும் மாறினார். ஆனாலும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக இன்றளவும் கடும் எதிர்ப்பலைகள் நிலவி வருகின்றன.
அசீம் vs பிரதீப் என்று ஒப்பிடுகையில் இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரை நடந்துகொண்டிருந்தாலும், அசீமுக்கு இரண்டு முறை ரெட் கார்டு வழங்கப்பட்டபோதிலும், அவரை பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக தேர்வு செய்து, 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, கார் ஒன்றையும் பரிசாக அளித்தனர். ஆனால், பிரதீப் மட்டும் ரெட் கார்டு வழங்கி வெளியேற்றபட்டது நியாயமா என இணையவாசிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.