பிக்பாஸ் சீசன் 7
சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. வாரக் கடைசியில் கமல் முன்பு பெண் போட்டியாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி போட்டியாளர் பிரதீப் ஆண்டனி மீது குற்றம் சாட்டினர்.
இதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களுல் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது.
நீயா நானாவில் பிரதீப்
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பெண்கள்மீது அளவுக்கு அதிகமான அக்கறை காட்டும் ஆண்கள் ஒருபக்கமும், அதனால் எரிச்சல் அடையும் பெண்கள் மறுக்கம் என பல்வேறு விவாதங்களை இந்த எபிசோட் தொடங்கி வைத்தது. பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய தோழியாக இருக்கும் பெண்களிடம் அக்கறை என்கிற பெயரில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான பல்வேறு கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்டன.
மிஸ்டேக் பன்னிதான் கத்துக்கனும்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் பிரதீப் ஆண்டனி “ நான் அருவி மற்றும் வாழ் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு படத்தில் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை காதலிக்கிறேன். இன்னொரு படத்தில் கொலை செய்த ஒரு பெண்ணைக் காதலிப்பவனாக நடித்திருக்கிறேன். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லை.
நான் கல்லூரி படிக்கும் காலத்தில் இதே ஆண்கள் மாதிரி நானும் இருந்திருக்கிறேன். நான் பழகும் பெண்கள் என்னைத் தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். ஒரு சில ப்ரேக் அப்களை சந்தித்த பின் தான் அப்போது அது எல்லாம் தவறு என்று எனக்கு தெரிந்தது. ஒரு பெண்ணை நமக்கு பிடித்திருக்கிறது என்றால் அவர்களின் மேல் நாம் நம்முடைய வீட்டில் இருக்கும் கட்டுப்பாடுகளை சுமத்துகிறோம்.
எப்படி எனக்கு பிடித்ததை செய்வதற்கான சுதந்திரம் எனக்கு இருக்கிறதோ அதே மாதிரி என்னுடைய எதிரில் நிற்கும் எதிர் பாலினத்தவருக்கும் தனக்கு பிடித்ததை செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். நமக்கு ரொம்ப பிடித்த ஒரு பெண் நம்மை விட்டுப் போகும்போது தான் நம் மேல் ஏதோ தப்பு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம்.
பிரெஞ்சு எழுத்தாளர் சார்தரின் ஒரு வரி இருக்கிறது. இன்னொருவரின் கண் தான் ஒருவனின் நரகம் என்று. நான் அதிகம் நேசித்த பெண் என்னைக் கேவலமாக பார்த்தால் அதைவிட வலி வேறு எதுவும் இல்லை “ என்று பிரதீப் பேசியுள்ளார்.
பிரதீப் இப்படி பேசியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.