விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்குள் நிலவும் சண்டைச் சச்சரவுகள், மனஸ்தாபங்கள், வாக்குவாதங்களே பிக்பாஸ். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணிக்கும் ஒளிப்பரப்பாகி வருகிறது.
பிக்பாஸின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சையில் இருக்கிறார். இதனால் வரும் எபிசோட்களை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனாவால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரின் மகளான ஷ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் கசிந்தது. எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகத நிலையில் கமல் தரப்பு டிஜிட்டல் யுகத்தை நம்பி களம் இறங்க இருப்பதாக தற்போது கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தபடியே விர்சுவல் முறையில் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் பச்சைக் கொடி காட்டி, தொழில்நுட்ப ரீதியாகவும் எல்லாம் சரியாக அமைந்தால் பிக் பாஸில் ஒரு வித்தியாசமான எபிசோட்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்