பிக்பாஸ் 7 தமிழ்:


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 67 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர்.


இது ரசிகர்களை அயற்சியில் ஆழ்த்தி இலகுவாக ஒன்ற முடியாமல் செய்தது. ஆனாலும் 5 வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்கள் அதிரடியாக நுழைந்து மக்கள் கருத்துகளை உள்ளே சொல்ல, மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னேறியது. முந்தைய சீசன்களைப் போல் எண்டெர்டெய்ன்மெண்ட் இல்லாமல் வார்த்தைப் போர், தடுக்கி விழுந்தால் சண்டை, அடிதடி என ரணகளமாக இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது.


மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர். நீண்ட நாள் ஆசைக்குப் பிறகு ஒரு வழியாக இந்த வாரம் விஷ்ணு கேப்டனாகி உள்ளார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, தினேஷ், மணி, விசித்ரா, நிக்சன் ஆகியோர் இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.


அர்ச்சனாவை டார்க்கெட் செய்த சக போட்டியாளர்கள்:


இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவில் அர்ச்சனாவை, சக போட்டியாளர்கள் சூழ்ந்து அவர் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை வைக்கின்றனர். அதாவது, முதலில் விஜய் பேசுகையில், "ஒருவரோட பலவீனத்தை கண்டுபிடிச்சி அதையே பேசி பேசி அவங்கள குத்தாதீங்க. சம்பந்தப்பட்டவங்களுக்கு வலிக்கும். நீங்க (அர்ச்சனா) அதை தான் பண்ணுறீங்க" என்று கூறினார். தொடர்ந்து விக்ரம் கூறுகையில், "ஒருவர் செய்த தவறை ஏற்றுக் கொண்டு, அதில் இருந்து வெளியே வந்தால், நீ செய்தது தவறு தவறு.. நீ அப்படி தான்.. நீ அப்படி தான்...என்று அவரை தவறாக காண்பித்து வருகிறீர்கள்” என்று விக்ரம் கடுமையாக சாடினார். மேலும், பூர்ணிமா, "நீங்க (அர்ச்சனா) ஒருவரோட பலவீனத்தை தெரிந்து தாக்குறீங்க" என்று கூற, இதற்கு அர்ச்சனா கடுப்பாகி மறுப்பு தெரிவித்தப்படி ப்ரோமோ முடிகிறது. 



வைல்டு கார்டு எண்டரியாக வந்த அர்ச்சனாவுக்கு ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவு பெருகியது. மேலும், வார இறுதி நாட்களில் தனக்கு வரும் கைத் தட்டல்களை பார்த்து, தான் செல்லும் பாதை சரி என்று புரிந்து கொண்ட அர்ச்சனா, தன்னுடைய விளையாட்டை வேற லெவலில் தொடங்கினார். இருப்பினும், இவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறேதா அதே அளவிற்கு விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது.


அதாவது, வெளியில் அனைவரின் வீக்னஸையும் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த வாரங்களில் அவர்களின் வீக்னஸை பத்தி பயங்கரமாக தாக்கிப் பேசி வருகிறார் அர்ச்சனா.  இதுவே தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இந்த வாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அர்ச்சனாவின் இந்தச் செயலை கமல் கண்டிப்பாரா? இல்லையா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.