தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனின் டைட்டில் வின்னர் பல்லவி பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயது வித்தியாசமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு நிகராக ரியாலிட்டி ஷோக்கள் கவர்ந்திழுத்து வருகின்றன. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானால் தவறாமல் நம்மில் பலரும் டிவி முன்னால் ஆஜராகி விடுவோம். அப்படியே நிகழ்ச்சியை தவற விட்டு விட்டால் தற்போது ஓடிடி தளங்களில் எப்போது வேண்டுமானால் பார்த்துக் கொள்ளும் வசதியும் வந்துவிட்டது.
இதனிடையே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்று பிக்பாஸ். இதனை தமிழில் விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதேபோல் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 7வது சீசன் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக பல்லவி பிரசாந்த் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு விருதும், ரூ.35 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
தெலங்கானாவில் விவசாயம் செய்து வரும் பல்லவி பிரசாந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் கொண்டாடினர். அதேசமயம் இந்த சீசனில் பல்லவி பிரசாந்த் அதிகமாக கிண்டல் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியான அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் போட்டியாளர்களை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இப்படியான நிலையில் அவ்வாறு அண்ணபூர்ணா ஸ்டூடியோவில் கூட்டிய ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2வது வின்னராக தேர்வு செய்யப்பட்ட அமர்தீப்பின் காரை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இறுதிப்போட்டி வரை வந்த அஸ்வினி, கீத்து கார்களும் தாக்கப்பட்டது. இதில் அமர்தீப் அந்த தாக்குதலை பெரிதும் பொருட்படுத்தாத நிலையில், மற்ற இருவரும் ஜூப்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கார்களை தாக்கியவர்கள் பல்லவி பிரசாந்தின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் அமர்தீப்புடன் காரில் அவரது தாயார் மற்றும் மனைவியும், நடிகையுமான தேஜஸ்வினி இருந்த நிலையில் நடந்த தாக்குதல் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஸ்வினி,கீத்து கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்லவி பிரசாந்த், அவரது சகோதரர் மனோகரை முதன்மை குற்றவாளியாக சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து பல்லவி பிரசாந்தை கைது செய்தனர். அன்னபூர்ணா ஸ்டூடியோவில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு பிறரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.