பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் மரியாதை குறித்து நேற்றைய எபிசோடில் பாடம் நடத்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டதட்ட 50வது நாளை இன்றுடன் எட்டியுள்ளது. இந்த 50 நாட்களாக அந்த வீட்டில் நிக்ஸன், விசித்ரா, கானா பாலா, விஷ்ணு விஜய், அர்ச்சனா, மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ், தினேஷ், அக்‌ஷயா, ரவீனா, மணி சந்திரா, சரவண விக்ரம், ஆர்.ஜே.பிராவோ, ஜோவிகா ஆகியோர் உள்ளே உள்ளனர். ஆனால் உள்ளே இருக்கிறவர்களில் சிலர் வயதில் மூத்தவர்களை கூட மரியாதைக் குறைவாகவும், தரக்குறைவாகவும் விமர்சிப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


இதனிடையே நேற்று (நவம்பர் 18) ஒளிபரப்பான எபிசோடில், “பிக் பாஸ் நிகழ்ச்சி 49 வது நாளை கடந்துள்ளது. கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில், இன்னும் மரியாதை கிணறு ஆழமும் உயரமும் யாருக்கும் புரியவில்லை எனக் கூறி ஒவ்வொரிடமும் மரியாதை என்றால் என்ன நினைக்கிறீர்கள்?” என்பது குறித்த கருத்துக்களை கமல் கேட்டு அறிந்தார்.






இப்போது பேசிய விசித்ரா, “உன்னை போல் ஒருவன் டாஸ்கின் போது தன்னைப்போல வேடம் அணிந்து இருந்த நிக்ஸன் தான் மரியாதை குறைவாக இந்த வீட்டில் மற்றவர்களை நடத்துவதாக சுட்டிக் காட்டியதைக் கண்டு தனக்கு அதிர்ச்சி ஏற்பட்ட தெரிவித்தார். இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் என்னுடைய மூத்த மகன் வயதை ஒட்டியே உள்ளனர். அதனால் அனைவரையும் அம்மா என்ற ஸ்தானத்தில் உரிமையாக தான் அழைத்து பேசுவேன். உலகத்தில் எந்த அன்பு வேண்டுமானாலும் பொய்யாக இருக்கலாம்.  ஆனால் தாய் அன்பும், அக்கறையும் பொய்யில்லை.


அந்த டாஸ்க் செய்த பிறகு சக போட்டியாளர்களிடம் ஒரு லிமிட்டை கடைபிடிக்க முடிவு செய்தேன் என தெரிவித்தார். என்னை மேடம் என அழைக்க சொன்ன போது, என்னிடம் வந்து அப்போ என்னை சார் என்று கூப்பிட வேண்டும் என நிக்ஸன் சொன்னார். நானும் அப்படியே செய்தேன்” என விசித்திரா தெரிவித்தார். 


இதற்கு பதில் அளித்து பேசிய நிக்ஸன், “என்னை சார் என அழைக்க வேண்டும் என அப்படி எதுவும் சொல்லவில்லை” என திட்டவட்டமாக மறுத்தார். உடனே குறுக்கே வந்த கமல், “நீங்கள் பேசியது நானும் பார்த்தேன் பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் பார்த்தார்கள் என சொல்ல நிக்ஸன் தான் வசமாக சிக்கி கொண்டதை உணர்ந்தார். சில நொடிகள் அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.


மேலும், “விசித்ரா என்னை லோக்கல் ரவுடி, பைத்தியம் பிடித்தவன் என்றெல்லாம் சொன்னார்கள் என கூறினார். எனக்கு விசித்ரா மேல் இப்போதும் மரியாதை இருக்கிறது” என சொன்னார். 


இதற்கு பதில் சொன்ன விசித்ரா, “நிக்ஸன் என்னிடம் அம்மாவிடம் உரிமையாக பேசுவது போல் கூறி இருந்தால் நானும் மகனை கண்டிக்கும் அம்மாவாக நடந்து கொண்டதும் சரிதான்” என படார் என்று பதில் அளித்தார். மேலும் ஐஷூ வெளியேறியதற்கு நான் தான் காரணம் என நிக்ஸன் என் மீது கோபமாக உள்ளான் என சொன்னார். அப்போது கோபத்துடன் நிக்ஸன் விசித்ராவை பார்த்துக் கொண்டிருந்தார். கமல் அவரது பெயர் சொல்லி கூப்பிட்டாலும் சில நொடிகள் கழித்து நிக்ஸன் திரும்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பின்னர் மரியாதை கொடுத்து தான் மரியாதை வாங்க வேண்டும் என்பதை தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பாடம் நடத்தினார் கமல்ஹாசன்