பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தன்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதாக அகோரி கலையரசன் வேதனை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையுடன் சென்ற கலையரசன்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரிய திரை, சின்னத்திரை பிரபலங்கள் தவிர்த்து சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களும் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த ஓராண்டுக்கு முன் பெரும் சர்ச்சையில் சிக்கிய அகோரி கலையரசனும் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மாற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளே சென்றார். ஆனால் அவர் அதிகமாக கோபப்பட்டது, கெட்ட வார்த்தை பேசியது என சர்ச்சையில் சிக்கினார். இதனால் 4வது வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் தற்போது பல நேர்காணல்களில் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.
அதில், “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்பு தான் கருத்து வேறுபாடு ஏற்பட்ட எனது மனைவியுடன் சமாதானம் ஏற்பட்டது. நவம்பர் 20ம் தேதி எங்கள் திருமண நாள் என்பதால் மீண்டும் அன்று நண்பர்கள் உள்ளிட்ட நெருங்கியவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என முடிவு செய்தோம். அதேசமயம் விதிகள் இருந்ததால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது பற்றி மனைவியிடம் கூட சொல்லவில்லை. எனினும் நான் பிக்பாஸ் முடிந்து என்னுடைய மனைவியைப் பார்க்க சென்றால் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியே போக சொல்லி விட்டார்கள்.
ஊசலாடும் தனிப்பட்ட வாழ்க்கை
எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் வளசரவாக்கத்தில் இருக்கும் எனது அபார்ட்மெண்ட் வீட்டுக்கு சென்று வீட்டேன். சமாதானம் ஆன என்னுடைய வாழ்க்கை தற்போது ஊசலாடி கொண்டிருக்கிறது. நான் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று விட்டு வெளியே எவிக்ட் ஆகி வந்து விட்டேன். நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என்ற கவலை துளி கூட இல்லாமல் மனைவி, குழந்தையை காண ஆவலோடு வந்தேன். ஆனால் வெளியே என்னை சுற்றிய சர்ச்சை வேறு மாதிரியாக இருந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் பிரச்னை எனக்கும், மனைவிக்கும் இல்லை. இரண்டு பேரின் வீட்டாருக்கும் தான். நான் யாரையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். கடந்த ஓராண்டாக மனைவியை பிரிந்து இருந்தேன், அப்பாவும் இறந்து விட்டார் என ஏகப்பட்ட மன உளைச்சல்களுக்கு மத்தியில் தான் நான் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றேன். சொந்தங்கள் யாரும் உடன் இல்லை. எப்படிப்பட்ட மன நிலையில் இருந்திருப்பேன் என யோசித்து பாருங்கள்.
ஒரு வருஷம் எனக்கு இருந்த மன அழுத்தம் உடனடியாக போய்விடுமா சொல்லுங்கள். இதற்கிடையில் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் விடவும் முடியாத நிலை உண்டானது. நாம் அடுத்த வருடம் கூட போலாமா என யோசித்தேன். இப்போது பிக்பாஸில் இருக்கும் பலரும் பல சீசன்களாக முயற்சி செய்தவர்கள். ஆனால் நானும், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் உடனடியாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.