சென்ற வாரம் முழுவதும் தொடர்ந்த மோசமான சண்டை மற்றும் கேலிக்கூத்துகளுக்கு இடையில், நேற்றைய பிக்பாஸ் வீக் எண்ட் எபிசோட் காரசாரமாக நடைபெற்று முடிந்துள்ளது. குறிப்பாக கமல்ஹாசன், நேற்று நிதானமாக இரு தரப்பு நியாயங்களையும் கேட்டு, மையமாக கருத்துகளை முன்வைத்தது ஒருபுறம் பாராட்டுகளையும் மறுபுறம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 


இவற்றின் மத்தியில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இன்றைய ப்மோவில் பிக்பாஸ் குடும்பத்தினர் சண்டை, சச்சரவுகளைக் கடந்து ஆட்டம், பாட்டமென தீபாவளி கொண்டாடி கலகலப்பாக உலா வரும் வீடியோ வெளியாகியுள்ளது.


கடந்த இரண்டு வார பரபரப்புகள் ஓய்ந்து ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டில் அமைதி திரும்பியுள்ள நிலையில் ரசிகர்கள் சற்றே ஆசுவாசமடைந்துள்ளனர்.


 



பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு பெற்று வெளியேறியது முதல் பிக்பாஸ் வீட்டில் கூச்சல், குழப்பங்கள் மேலோங்கி வருகின்றன. பிரதீப் ஆண்டனி அதிர்ச்சியளிக்கும் காரியங்களை செய்தார், கெட்ட வார்த்தைகள் பேசினார், பிக்பாஸ் வீட்டினர் மத்தியில், குறிப்பாக பெண்கள் பற்றி ஆபாச கமெண்டுகளை அள்ளி வீசினார் போன்ற குற்றச்சாட்டுகளை மாயா, பூர்ணிமா, ரவீனா, நிக்ஸன், ஐஷூ, மணி, ஜோவிகா உள்ளிட்ட பிக்பாஸ் குடும்பத்தினர் முன்வைத்தனர்.


தொடர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கவும் இவர்கள் வாக்களித்த நிலையில், அர்ச்சனா, கூல் சுரேஷ், விசித்ரா, தினேஷ் உள்ளிட்டவர்கள் அவருக்கு ரெட் கார்டு தராமல், கேமில் தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கோரினர்.


இந்நிலையில் மெஜாரிட்டி வாக்குகளின் அடிப்படையில் பிரதீப் ஆண்டனி ரெட்கார்டு பெற்று வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கூச்சல், குழப்பங்கள் பிக்பாஸ் வீட்டில் மேலோங்கிய நிலையில்,  பிக்பாஸ் வீடு இரண்டாக மாறி கடந்த வாரம் குழாயடி சண்டை கணக்கில் அதிர்ச்சியடைய வைத்தது.


மாயா - பூர்ணிமா - ஐஷூ உள்ளிட்டோர் ஒரு குழுவாக, விசித்ரா- அர்ச்சனா கூட்டணியைத் தாக்க பிக்பாஸ் வீடு ஆட்டம் கண்டு இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனி வெளியேற்றம் குறித்தும், பிக்பாஸ் வீட்டினரிடையே எழுந்த கருத்து வேறுபாடுகள் குறித்தும் பேசினார்.


அப்போது “பிரதீப்புக்கு தன் தரப்பு நியாயத்தை முன்வைக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று ஒரு கேள்வி இங்கே முன்வைக்கப்படுகிறது. 


கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தபோது எல்லாம் தன்னுடைய தவறுக்கு வருந்துவதோ, காரணம் சொல்லுவதோ இல்லாமல், மற்றவர்கள் செய்தது இதையெல்லாம் விட பெரிய தவறு என்று போய்க்கொண்டிருந்தார்.


அவர் தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வாரோ என்ற யோசனை எனக்கு வந்தது. “நான் 4 வயசுல இருந்தே இப்படி தான் சார் இருந்தேன். இப்படிதான் இருப்பேன்” என அவர் தனக்கான குழியை ஆழமாக வெட்டிக்கொள்வாரோ என நினைத்ததால் தான், போதும் விட்டுடுங்க என்றேன். இது அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு ” எனப் பேசினார். இந்நிலையில், கமல்ஹாசனின் இந்தப் பேச்சும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.