இன்று பிக்பாஸ் 7ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், யுகேந்திரன் வாசுதேவன் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்துள்ளார். பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யூகேந்திரா வாசுதேவனைப்  பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைப் பார்க்கலாம்.


யுகேந்திரா வாசுதேவன்


தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனது குரலை நீங்கா ஒன்றாக விட்டுச்சென்றுள்ளவர் மலேசியா வாசுதேவன். இவரது மகன் யுகேந்திரா வாசுதேவன், மிருதங்க வாத்தியக் கலைஞராக தனது இசைப்பயணத்தைத் தொடங்கியவர் யுகேந்திரா வாசுதேவன்.


தனது பத்து வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார் யுகேந்திரன். இசையஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 14 வயதுவரை தனது தந்தை மலேசியா வாசுதேவனும் இணைந்து மேடைகளில் பாடிவந்தார்.


இதனைத் தொடர்ந்து ரோஜாவனம் என்கிற படத்தில் பொள்ளாச்சி சந்தையில என்கிற தனது முதல் பாடலை பாடினார். இதனைத் தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன் படத்தில் பார்த்தேன் பார்த்தேன் என்கிற பாடலை பாடினார்.


பிரபல இசையமைப்பாளர்களின் இசையில்


இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா என தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள யுகேந்திரன் பெரும்பாலான பாடல்களை இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பாடியுள்ளார்.


 நடிகர் அவதாரம்


அஜித்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யுகேந்திரன். தனது முதல் படத்தை அஜித்குமாரின் படத்தில் தொடங்கி பகவதி, திருப்பாச்சி, மதுர உள்ளிட்ட விஜய் படத்தில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கையோடு கை,  பச்சை நிறமே உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடுத்துள்ளார். இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படம் யுகேந்திரன் நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம்.


இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு சீசனிலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற நாடுகளில் இருந்து போட்டியாளர்களை வரவேற்து வருகிறது பிக் பாஸ்.


இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இந்த முறை யுகேந்திரன் வாசுதேவன் இடம்பெற்றுள்ளார். இந்த சீசனில் அவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.