பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா விஜயகுமார் தன் பெயரை தமிழில் தப்பாக எழுதிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் 7வது சீசன்  கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர்.


அதேசமயம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸை பொறுத்தவரை பல்வேறு மொழிகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்றாலும், அவர்கள் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலும் தமிழை பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 


எல்லா நேரமும் ஆங்கிலம் பேசினால் கமல்ஹாசனே கண்டித்த பல சம்பவங்கள் முந்தைய சீசன்களில் நடைபெற்றிருப்பதை காணலாம். இதனிடையே இந்த பிக்பாஸ் 7வது சீசன் மிகப்பெரிய அளவில் விவாத பொருள் ஆனது. அதற்கு காரணம் இந்நிகழ்ழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமார் மகளான ஜோவிகா தான் இந்த சீசனின் மிகவும் வயது குறைவானவர். அவர் நிகழ்ச்சிக்கு வந்தவுடன் தான் படிப்பை பாதியில் நிறுத்தியதை தெரிவிக்க, அதற்கு படித்திருக்க வேண்டுமென விசித்ரா அட்வைஸ் செய்ய மிகப்பெரிய பிரச்சினை வெடித்தது. 






கமல்ஹாசன் பஞ்சாயத்து செய்தபோது தான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலானோர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து படிப்பு முக்கியமா என்ற விவாதமே நடைபெற்றது. இப்படியான நிலையில் ஜோவிகா, வீட்டில் உள்ள சின்ன ஸ்லேட்டில் தன்னுடைய பெயரை தவறாக எழுதும் வீடியோ வைரலாகி வருகிறது. ஜோவிகா என்னும் தன் பெயரை ஜேபவிகா என எழுதியிருந்தார். அதேபோல் விஜய்குமார் என எழுத அதில் விஜ்ய் என எழுதினார். உடனே அருகே நின்ற மாயா தவறை சுட்டிக்காட்ட ஜோவிகா அதனை சரிசெய்ய முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.


இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும், “இதுக்குதான் படிக்கணும் சொல்றாங்க” என கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தமிழ் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை,அதுக்குன்னு சொந்த பெயரை கூட எழுத தெரியாதது எல்லா, ரொம்ப ஓவர் என தெரிவித்து வருகின்றனர்.