பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்ட பிரதீப்:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த சீசனில் மஞ்சள் கார்டு, ரெட் கார்டு என அனைத்து அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் பிரதீப் ரெட் கார்டு பெற்று நேற்று போட்டியிலிருந்து வெளியேறினார். வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் தங்களிடம் வாக்குவாதம் செய்தது, அநாகரிகமாக பேசியது, இரட்டை அர்த்தத்தில் பேசியது என சகட்டுமேனிக்கு அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். முதலில் பொதுவெளியில் அனைவரது வாதத்தை கேட்ட கமல்ஹாசன் பின்னர் கன்பெஸ்சன் ரூமுக்குள் ஒவ்வொருவராக அழைத்து பிரதீப் செயலுக்கு அவரை வெளியேற்றலாமா? என கேட்டார்.
பிரதீப்புக்கு ஆதரவு:
இதனைத் தொடர்ந்து பெரும்பாலானோர் ரெட் கார்டை காட்டி அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கூறினார். இதனடிப்படையில்- பெண்கள் பாதுகாப்பை காரணம் காட்டி பிரதீப் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீட்டில் பிரதீப் செய்தது மட்டும் தான் தவறா?, மற்றவர்கள் அநாகரிக செயல்களில் ஈடுபடுவதும், ஆபாசமாக பேசுவதும் நடக்கிறது இதெல்லாம் தெரியவில்லையா? என கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர். இப்படியான நிலையில் பிரதீப்புக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பிரதீப்பின் நண்பரும், நடிகருமான கவின், ‘உன்னைப் பற்றி அறிந்தவர்கள் எப்போதும் உன்னை அறிவார்கள்’ என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து நடிகரும், நடன இயக்குநருமான சதிஷ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ பிரதீப் ரெட் கார்டு வழங்கப்பட்டதற்கு பெண்கள் பாதுகாப்பு மட்டும் தான் காரணமா?. அவருடன் மிகவும் நட்பாக இருக்கும் பெண்களின் காட்சிகளை பார்த்தேன். அவர்கள் திடீரென பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். வீட்டை சுற்றிலும் கேமராக்கள் உள்ளது. அவர் மட்டும் தான் வீட்டில் கெட்ட வார்த்தை பேசுகிறாரா?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.
சினேகன் ஆதரவு:
கவிஞரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சினேகன் தனது ட்விட்டர் பதிவில், ‘நீ பார்க்காத ரணங்களும் இல்லை... நீ பார்க்காத வலிகளும் இல்லை... பிரதீப்... இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை.... வெளியே கிடக்கு வா' என பதிவிட்டுள்ளார். சினேகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞரணியின் மாநில செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.