Bigg Boss 7 Tamil Aishu: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஐஷூ, பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னை அதிகமாக காயப்படுத்தி விட்டதாகவும், தனிப்பட்ட முறையில் பிரதீப் மீது பழி சுமத்தவில்லை என்றும் ஐஷூ உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். 

 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐஷூ டிவிட்டரில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”எனது பிக்பாஸ் பார்வையாளர்கள் அனைவரிடம் ஆழமான மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். பிக்பாஸ் எனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்தது. அந்த இடத்துக்கு வர பலர் முயன்றும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிக்பாஸில் இருந்த என்னை பார்த்து, எனது மரியாதையை நானே இழந்து விட்டேன். நான் மக்களின் வெறுப்பை அதிகமாக சம்பாதித்துள்னேன். பிக்பாஸ் வீட்டில் என்னை பாதுகாக்க முயன்ற யுகேந்திரன், விச்சுமா, பிரதீப், அர்ச்சனா மற்றும் மணி அண்ணாவுக்கு ரொம்ப சாரி. பிக்பாஸ் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு மிகப்பெரிய சவாலான மேடை. அது நினைத்து பார்க்க முடியாத டாக்ஸிக் மேடையாக இருக்கும்.

 

அங்கு இருக்கும் வரை தன்னுடன் இருக்கும் சகபோட்டியாளர்களின் அன்பு மற்றும் மரியாதை புரியாது. அவர்களை குறை சொல்லி எப்படி வெளியே அனுப்புவது என்பது பற்றிதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அப்படி தான் நான் இருந்துள்ளேன். கோபம், அன்பு, நட்பு எல்லாம் என் கண்ணை மறைத்து என்னை பிக்பாஸ் விளையாட்டை சரியாக விளையாட முடியாமல் வைத்து விட்டது. நான் செய்ததற்கு என் குடும்பத்தை கஷ்டப்படுத்த வேண்டாம். என் குடும்பத்தை தனியாக விடுங்கள். சோஷியல் மீடியாவில் என்னை பற்றி நெகட்டிங் கமெண்ட்கள் பல வந்துள்ளன. அது என் குடும்பத்தை அதிகமாக பாதிக்கிறது. தவறு செய்தது நான் தான். தவறான பாதையை தேர்ந்தெடுத்து சென்றது நான் மட்டுமே. 

 

வனிதா மேம் சாரி. நான் உங்கள் மகளை விட 2 வயது தான் பெரியவள் 21 வயதில் எனக்கான புரிதல் இல்லாமல் போனது. நான் நடந்து கொண்டதற்கு மனதார மன்னிப்பு கேட்கிறேன். பக்குவம் இல்லாத நடவடிக்கையால் என்னையே நான் வெறுக்கிறேன். என்னை நம்பி இருந்தவர்களையும் நான் அசிங்கப்படுத்தியுள்ளேன். எது சரி, தவறு என்ற உண்மையை தெரிந்து கொள்வதில் நான் தோல்வியடைந்துள்ளேன். 

 

எனது மன்னிப்பை பிரதீப்க்கு கேட்கிறேன். உங்களை தெரிந்து இருந்தும் ரெட்கார்டு கொடுத்து விட்டேன். நான் வந்ததுக்கு அப்பறம் நிக்சன் சரியாக விளையாடுவார் என நினைக்கிறேன். தவறு என்னுடையது, தவறு நான் செய்துள்ளேன். என்னுடைய குடும்பத்தை மனித்து விடுங்கள். இனி என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்” என கூறியுள்ளார். 

 


பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதில் இருந்து இரண்டு வாரங்களாக தனியே விளையாடிய ஐஷூ, அடுத்ததாக நிக்சனுடன் அதிகமான பேச தொடங்கினார். நிக்சன் மற்றும் ஐஷு காதலிப்பதாக பிக்பாஸ் வீட்டிலும் சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பரவின. ஐஷூக்காக நிக்சன் பரிந்து பேசுவது பிக்பாஸ் விளையாட்டை சொதப்புவதாக இருந்தது. 

 

இதற்கிடையே, பெண்களுக்கான உரிமைக்குரல் தூக்கியபோது ஐஷூவும் கூட இருந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தார். அதன்பின்னர், விசித்ரா மற்றும் அர்ச்சனாவுடன் நடந்த வாக்குவாதத்தில் மாயா கூட்டணியுடன் ஐஷூ இணைந்து சண்டையிட்டார். ஆரம்பத்தில் இருந்து இப்படியே நடந்து கொண்டதால் ஐஷூ மீது எதிர்மறை விமர்சங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் ஐஷூயின் தாய் இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தங்களின் ஐஷூ அது இல்லை என்றும், உண்மை எது, பொய் எது என தெரிந்து கொள் என்றும் அவர் உருக்கமாக கூறி இருந்தார். இதற்கிடையே கடந்த வாரம் குறைவாக வாக்குகள் பெற்ற ஐஷூ வெளியேறினார்.