பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் 2ஆம் இடம் பிடித்தார். அவருக்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 


மக்களின் மனங்களை வென்ற விக்ரமன்! 




கடந்த சில நாள்களாக டாக் ஆஃப் த டவுனாக மாறி, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை நிச்சயம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் விக்ரமன். சின்னத்திரை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பத்திரிகையாளர், அரசியல் என பல துறைகளிலும் பயணித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த விக்ரமன், தொடக்கம் முதலே தன் கனிவான பண்பாலும் தெளிவான பேச்சாலும் கவனம் ஈர்த்தார்.


முதல் சீசனில் பங்குபெற்ற காயத்ரி ரகுராம் இந்நிகழ்ச்சிக்கு பின்னரே அரசியலில் நுழைந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமன் அரசியல் பின்புலம் கொண்ட ஒரு நபராக முதன்முறையாக பிக் பாஸில் நுழைந்தார்.


அறமே ஆயுதம்!


இந்நிலையில், விக்ரமன் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை கையாளப்போகிறார் என்ற ஆர்வம் மக்களிடையே  எழுந்தது. ஆனால் முதல் வாரத்தில் இருந்தே அறம், கண்ணியம் ஆகிய விஷயங்களை அழுத்தமாக முன்னிறுத்தி தன் விளையாட்டை நேர்மையாக விளையாடினார் விக்ரமன். ஆரியுடன் ஒப்பிட்டு முதலில் இவரை ரசிக்கத் தொடங்கினர் ரசிகர்கள். ஆனால் நாளடைவில் இவரது தனித்துவமான கேம் ப்ளேவால் பிக் பாஸ் ரசிகர்களின் மனங்களை வெல்லத் தொடங்கினார்.


ஒரு கட்டத்தில் விக்ரம் Vs அஸீம் என மாறிய விளையாட்டு அனல் பறக்கத் தொடங்கியது. பிக் பாஸ் வீட்டிலுள்ள அனைவருடன் சரமாரியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரிடமும் நல்ல நட்பையும் கொண்டிருந்தார் விக்ரமன்.


தன்னிலை மாறாத கேம் ப்ளே!




விளையாட்டில் சுய மரியாதையை இழுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது, கண்ணியம் பேண வேண்டும்,  என்பது தொடங்கி, எப்படிப்பட்ட சண்டைகளிலும் தன்னிலை மறக்காமல், சரியான கருத்துகளை உரக்கச் சொல்லி தன் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல் மக்களின் குட் புக்ஸில் இடம்பெற்றார் விக்ரமன்!


டாஸ்க்குகளிலும் முழு ஈடுபாடு காண்பித்து தன் அட்டகாசமான கேம்ப்ளேவால் ஒரு கட்டத்தில் சமூக வலைதள சென்சேஷனாக மாறிய விக்ரமன், ஷிவினுடனான அவரது நட்பால் பெரிதும் ரசிக்கப்பட்டார்.


அறிவுரை சொல்லும் காரணத்துக்காகவும், வார்த்தைக்கு வார்த்தை பொலிட்டிகல் கரெக்ட்னஸ் பார்ப்பதற்காகவும் இன்றைய தலைமுறையினரால் பல இடங்களில் பூமர் என கேலி செய்யப்பட்டாலும், தனக்கான ரசிகர் பட்டாளத்தை அப்படியே தக்கவைத்து இறுதி வாரம் வரை வெற்றிகரமாக பயணித்துள்ளார் விக்ரமன்.


’காலம் முழுவதும் போராடுவேன்'


இறுதி வாரத்தில் விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் தொடங்கி ஆதரவு ட்வீட்கள் குவிந்த நிலையில், விக்ரமன் டைட்டில் வெல்வார் என்றே நெட்டிசன்கள் ஆரூடம் சொல்லி வந்தனர். ஆனால் இறுதியில் நூலிழையில் டைட்டிலை தவறவிட்ட விக்ரமன், இரண்டாம் இடம் பிடித்துள்ளது ரசிகர்களை அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


விக்ரமன் ஜெயிப்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என அமுதவாணன் உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் “போராட்ட குணம் கொண்ட நான், காலம் முழுவதும் போராடுவேன். அறம் வெல்லும்” என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறி மக்கள் மனங்களை வென்று விடைபெற்றுள்ளார் விக்ரமன்!


பிக்பாஸ் சீசன் 6


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி,விக்ரமன் மற்றும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.


இறுதிப்போட்டி 


இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் இருந்த நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தப் போட்டியில் அஸிம் பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் கோப்பையுடன் ரூ.50 லட்சம் பணம் வழங்கப்பட்டது. 2ஆவது இடத்தை விக்ரமனும், 3ஆவது இடத்தை ஷிவினும் பெற்றனர்.