பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அஸிம் இறுதிப்போட்டியில் பங்கேற்பது குறித்து அவரது சகோதரர் ஆதில் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 


பிக்பாஸ் சீசன் 6


கடந்தாண்டு அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முதல்முறையாக மக்களிடம் இருந்து தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் என இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. 


இந்த சீசனில்  ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி பங்கேற்றனர். 






இறுதிப்போட்டி 


இதனிடையே இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரூ.3 லட்சம் பணத்துடன் விஜே கதிரவன் முதலில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரூ.11.75 லட்சம் பணத்துடன் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அமுதவாணன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த மிட்நைர் எவிக்ட் சுற்றில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். 


இதனால் விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ளனர். இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பலரும் விக்ரமன், அஸிம் பெயர்களை வைரலாக்கி வரும் நிலையில், இதற்கான ஷூட்டிங் நேற்று இரவு நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் டைட்டில் வின்னர் பற்றிய தகவல்  ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டதால் இணையவாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் கலப்பு கூடாது எனவும் தெரிவித்தனர். 


அஸிம் சகோதரர் பேட்டி 


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பங்கள் வரும் எபிசோடில் அஸிமின் சகோதரர் முகம்மது ஆதில் வருகை தந்திருந்தார். அவர் தற்போது நேர்காணல் ஒன்றில் அஸிம் இறுதிப்போட்டியில் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில், “கண்டிப்பாக  அஸிம் ஜெயிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கு. எல்லோருமே நல்ல போட்டியாளர்கள் தான். அவர் தனிமனிதனாக அந்த வீட்டில் போராடியதாக பிக்பாஸே பாராட்டியிருக்கிறார். மக்கள் கிட்டயே அனைத்தையும் விட்டுவிட்டோம். விக்ரமனை அவர் சார்ந்த கட்சி சார்பில் இருந்து ஆதரிங்கன்னு ட்வீட் பண்ணிருந்தாங்க.


பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கான போட்டி தான். அவர்களின் வாக்குகளை பொறுத்து தான் எல்லாம் அமைந்துள்ளது. அவர்கள் ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களையும், கட்சி ரீதியாக வருகிற சப்போர்ட்டையும் பார்த்து அவர்களின் வாக்குகளை செலுத்தியிருப்பார்கள் என நம்புகிறேன். அஸிமின் சகோதரரா இல்லாமல் பொதுமக்களில் ஒருவராக இருந்து சொல்ல வேண்டுமென்றால் அஸிம் ஜெயிப்பார் என நம்புகிறேன்” என அந்த நேர்காணலில் முகம்மது ஆதில் கூறியுள்ளார்.