பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் நேரடி அரசியல்வாதி போட்டியாளராக விசிக செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான்.
அதன்படி நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி ஆகியோரோடு விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமனும் பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் பிறந்து தேனியில் வளர்ந்த அவருக்கு சிறு வயதில் அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி வளர்ந்தேன். ஒரு விஷயம் நம்மளால முடியலன்னாலும் அதிகாரத்துல இருக்கறவங்களை செய்ய வைக்கணும். தான் பார்த்த பத்திரிக்கையாளர் பணி அதற்கு பெரிய அளவில் கைக்கொடுப்பதாகவும் விக்ரமன் கூறியுள்ளார்.
உங்கள் கருத்துக்கும் களத்தில் செய்ய வேண்டிய பணிக்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி உதவும் என நினைக்கிறீர்கள் என கமல்ஹாசன் விக்ரமனிடம் கேட்டார்.
நான் சின்ன வயதாக இருந்த போது விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் அனு நிகழ்ச்சியில் நீங்க கலந்துக்கிட்டிங்க. அதுல மக்களின் தேவைகள் பற்றி பேசுனீங்க. எழுத்தாளர் தொ.பரமசிவன் பற்றி அறிமுகம் செய்தீங்க. போன பிக்பாஸ் சீசன்ல அவரைப் பத்தி நீங்க பேசுனது நிறைய பேருக்கு போய் சேர்ந்துச்சு. ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அப்படின்னு இதை நீங்க தவிர்க்கல. இயற்கையாகவே உங்ககிட்ட அந்த எண்ணம் இருக்கு. அப்படி என்னாலையும் ஒரு விஷயத்தை கொண்டு போக முடியும்ன்னு நினைக்கிறேன். நம்புறேன்.மேலும் சொல்லும் செயலும் ஒரே மாதிரி இருக்கணும். அதை வெளிப்படுத்துற ஒரு சான்ஸ்ன்னு நான் நினைக்கிறேன் என விக்ரமன் தெரிவித்துள்ளார்.