தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. 






பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே வழக்கமாக சண்டையும், சர்ச்சைகளும் அதிகம் இருக்கும். அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான பிக் பாஸ் ப்ரோமோவிலேயே, “வீடும் பெருசு... கலாட்டாவும் பெருசு” என கமல் தெரிவிப்பது போல வசனம் வருகின்றது. அதனால், சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது என சொல்லாமல் சொல்லியுள்ளது பிக் பாஸ் குழு. 


இந்நிலையில், ஐந்தாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. போட்டியாளர்கள் யார், யார் என்பதில்தான் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 






பல்வேறு துறைகளிலும் மிகவும் பிரபலமான 30 நபர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்காக தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களில் இருந்து இறுதிகட்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 சீசன்களிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும், பல்வேறு புதிய விதிகள் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. அறிமுக நிகழ்ச்சி, அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.