பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. 10 பெண்கள், 7 ஆண்கள், 1 திருநங்கை என 8 பேர் உள்ளே சென்றனர். சிலர் திரையுலகுக்கு அறிமுகமானவர்கள், பலர் அறிமுகம் இல்லாதவர்கள். தொடக்கத்தில் சற்று தொய்வாக தொடங்கினாலும் போகப்போக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது பிக்பாஸ். தொடங்கிய சில நாட்களிலேயே வைரலானார் நமிதா. 'கதை சொல்லட்டுமா?' பகுதியில் நமீதா தன் கதையைச் சொன்னபோது, “உடலில் மாற்றம் ஏற்பட்டு கேலிக் கிண்டலுக்கு ஆளானது முதல், உடலில் விழும் அடிகள் தொடர்ச்சியான பழக்கமாகி மறுத்துப்போனது வரை, அவர் கோர்வையாய் பேசியவை எல்லோரையும் அசைத்து, அழவைத்தது. பயம், பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லைகள் என தான் கடந்து வந்த அனைத்தையும், நம் கண்முன்பு நிறுத்தினார் நமீதா. 




பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நமீதா, பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவக் காரணங்களுக்காக அவர் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியில் வந்ததாக வெளியான தகவலும், பிக்பாஸ் ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென்று ஷோவில் இருந்தும் அவர் காணாமல் போனார். ஏன் திடீரென நமீதா வெளியேறிவிட்டார் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


மூன்றாம் பாலினத்தவரான நமீதா, தன் உடல் சார்ந்த சில மருத்துவ சிகிச்சையை எடுத்துகொண்டதாகவும், அதில் சில உடல்நலப் பிரச்னைகள்  ஏற்பட்டதால் அவர் அவசரமாக வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மீண்டும் அது தொடர்பான சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. 




இந்நிலையில் நமீதா மீண்டும் உள்ளே வருவாரா என்ற தகவல் கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையே நமீதாவுக்கு பதிலாக வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பிரபல துணை நடிகை ஷாலு ஷம்மு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஒன்றரை மாதங்களுக்கு பிறகே வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் பங்கேற்பாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் போவார்கள். ஆனால் இந்த முறை நமிதா வெளியேறியதால் இப்போது வைல்டு கார்டு  எண்ட்ரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.