விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் தற்போது தீயாக விவாதமாகியுள்ள விஷயம் என்றால் நேற்றைய எப்பிசோடில் நிக்‌சன் விட்ட வார்த்தைகள்தான். குறிப்பாக நிக்சன் மற்றும் அர்ச்சனாவுக்கு இடையில் நடைபெற்ற காரசாரமான விவாதத்தில் நிக்சன் வார்த்தைகளை அள்ளி வீசினார்.


குறிப்பாக, “ச்சீ பொண்ணா நீ, மூஞ்சியா  அது, நான் எல்லாம் காலாய்ச்சனா நீ எல்லாம் 3 நாளைக்கு உக்காந்து அழுகனும், சொருகீடுவேன்” போன்ற வார்த்தைகள்தான் அவை. இதில் சொருகிடுவென் எனும் வார்த்தை கொலை மிரட்டல் விடுப்பதைப் போல் இருந்தது. இதனால் இந்த வாரம் நிக்சன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படலாம் என பேசப்படுகின்றது. இதற்கு ஏற்றதைப் போல் விஜய் டிவி தரப்பிலும் சமூக வலைதளத்தில் நிக்‌சனை படு பங்கமாக கலாய்த்து வீடியோ பகிர்ந்துள்ளனர்.




நேற்று ப்ரோமோவுக்குப் பின்னர் விஜய் டீவி இந்த வீடியோவை வெளியிட்டனர். ஆனால் நேற்றைய எபிசோடில், அர்ச்சனா மற்றும் நிக்சன் விவாதத்திற்குப் பின்னர் தினேஷூக்கும் நிக்‌சனுக்கும் வாக்குவாதம் ஆனது. அதில் நிக்சன், “இங்க என்ன செய்யறோம், அப்படிங்கறது எல்லாம் முக்கியமில்லை. வெளியே போய் மூனு வருஷம் கழிச்சு, இல்லைனா அஞ்சு வருஷம் கழிச்சு நீங்க எங்க இருக்கீங்க, நான் எங்க இருக்கேன்னு பாக்கலாம்” எனக் கூறினார். இது பிக்பாஸ் வீட்டுக்குள் சிறிது நேரம் புகைச்சலைக் கிளப்பியது. குறிப்பாக தினேஷ் மற்றும் மணி நிக்‌சனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் “நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் எதிரொலிக்கும். எனவே கவனமாக பேசவேண்டும்” எனக் கூறியிருந்தார். இது மட்டும் இல்லாமல், போட்டியாளர்களே மற்றவர்களை நாமினேஷன் செய்யும்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சி எனக்கூறி ஏதோ ஒரு காரணத்தை கூறுகின்றனர். ஆனால் குழந்தைகள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் நிக்சன் 3 ஆண்டுகளுக்குள் இண்டஸ்ட்ரியில் நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள், நான் எங்கு இருக்கின்றேன் எனப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். 




நிக்‌சனின் இந்த வாதம், ஒருவருடன் மற்றவரை ஒப்பிடும் விதமாக உள்ளது. மேலும் வெற்றிக்கான காரணம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரி இருக்கும். ஆனால் நிக்‌சனின் கூற்று நான் வெற்றி பெறும் காலத்தில் நீங்கள் வெற்றி பெறவேண்டும் அப்போதுதான் நீங்கள் வெற்றியாளர், இல்லை என்றால் நீங்கள் வெற்றியாளர் இல்லை என்பது போல பொருள்படுகின்றது. இது ஏற்புடையாதாக இல்லை என பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் நிக்‌சனின் ரசிகர்கள் நிக்‌சனுக்கு தொடர்ந்து ஆதரவளித்தும் வருகின்றனர். ஒரு தரப்பினரோ “அர்ச்சனா கூறுவதைப் போல் நிக்‌சனுக்கு இன்னும் மெச்சூரிட்டி போதவில்லை என்பது சரிதான்” எனக் கூறிவருகின்றனர்.