Bigg Boss Poornima: பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமாகியுள்ள பூர்ணிமா ஹீரோயினாக நடித்துள்ள படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பூர்ணிமா பங்கேற்றுள்ளார். ஆரம்பம் முதலில் வீட்டில் இருந்து வரும் பூர்ணிமா மாயாவுடன் இணைந்து சர்ச்சைகளிலும் சிக்கினார். எனினும், பூர்ணிமாவின் கேப்டன்சியை பிக்பாஸ் போட்டியாளர்கள் வரவேற்றனர். அதனால், இரண்டாவது முறையாக மீண்டும் பூர்ணிமா கேப்டனாக மாறினார். பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததாலும், விசித்ராவிடம் வம்பிழுத்ததாலும், அர்ச்சனாவுடன் சண்டைக்கு சென்றதாலும் பூர்ணிமா வைரலானார்.

 

கடந்த வாரம் விக்ரமை பூர்ணிமா மாயாவுடன் சேர்ந்து கரப்பான் பூச்சி எனக் கிண்டலடித்து பேசியதை கமல் கண்டித்த சம்பவமும், பிக்பாஸ் மீது பூர்ணிமா வைத்த குற்றசாட்டும் சோஷியல் மீடியாவில் அவரது பெயரை ஆக்டிவாக வைத்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பூர்ணிமா ஹீரோயினாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

 

அராத்தி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான பூர்ணிமா குறும்படங்களில் நடித்து வந்தார். அதனால் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாக நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்துள்ள அன்னபூரணி படத்தில் பூர்ணிமா சிறு கேரக்டரில் நடித்துள்ளார். இதேபோல், எம்.எஸ்.ராஜா இயக்கி இருக்கும் செவப்பி என்ற படத்தில் பூர்ணிமா ஹீரோயினாக நடித்துள்ளார். முட்டையில் செவப்பி என எழுதப்பட்டிருக்கும் டைட்டிலுடன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், “ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த், சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.

1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த செவப்பியின் கதை. அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பைப் போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான்.

பாசப்பிணைப்பு ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. இதனால் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் “செவப்பி”யின் கதை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பூர்ணிமா நடித்துள்ள செவப்பி படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 12ம் தேதி லீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் மூலம் பிரபலமாகி வரும் பூர்ணிமா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.