பிக் பாஸ் தமிழ் 7ஆவது சீசனில் போட்டியாளராக நடிகர் பிரதீப் ஆண்டனி கலந்துகொண்டுள்ளார். பிரதீப் ஆண்டனி இந்த சீசனில் கவனம் பெறக் கூடிய ஒரு பங்கேற்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மக்களின் ஹீரோவாக இருப்பாரா, அல்லது வில்லனாக இருப்பாரா என்பது அவரது கையில் தான் இருக்கிறது!


பிரதீப் ஆண்டனி


அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய அருவி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் பிரதீப்.  இயக்குநர் ஆகும் கனவுகளை சுமந்து உதவி இயக்குநராக இருந்து படாதபாடுபடும் ஒரு இளைஞனாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து ‘வாழ்’ திரைப்படத்திலும் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது. தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை சிறப்பாக நடிக்கக் கூடியவர் தான் என்பதை திரையில் நிரூபித்துள்ளார் பிரதீப் ஆண்டனி. மேலும் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றால் அதில் வரும் பணத்தில் ஒரு படத்தை இயக்கும் கனவுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.  தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில்  போட்டியாளராக அவர் வந்திருப்பது பலரது எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.


பேச்சே சரியில்லையே...


படத்தில் மரியாதையாக அப்பாவியாக பேசும் பிரதீப் ஆண்டனி, நிஜ வாழ்க்கையில் அனைவரையும் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.  ரவீனாவிடம் இருந்து கேப்டன் பதவியை பேசி வாங்கிய பிரதீப், அதே கேப்டன் பதவிக்காக தன்னிடம் பேசிய நிக்சனிடம் பேசிய முறை ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.






அதிகப்படியான தன்னம்பிக்கை, பிறரை பேச விடாமல் வாதத்தில் ஜெயிக்க நினைக்கும் முனைப்பு, அறிவாளித்தனமாக பேசுவதாக நினைத்து  துண்டு ஃபிலாசஃபிகளை உதிர்த்துவிடுவது, இப்படியான குணங்கள் அவரிடம் வெளிப்படுவதை அவர் பேசுவதில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.


அதே நேரத்தில்  கடைசிவரை விடாப்பிடியாக கேப்டன் பதவி தனக்குதான் வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றதில் இருந்து பிறர் தலைமையில் ஒன்றிணைந்து பிரதீப்பால் செல்ல முடியுமா என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


ஒவ்வொரு சீசனுக்கும் போகிற போக்கில் ஒர் நெகட்டிவ் ரோலை யாராவது ஒரு போட்டியாளர் கையில் எடுப்பார். அதே போல்  இந்த முறை அந்த வில்லன் ரோலை பிரதீப் எடுத்துக் கொள்வாரா, அல்லது படங்களில் வந்தது போல் சாதுவான அமைதியான ஒருத்தராக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!