பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்தவர்களில் ஒருவர் நடிகர் ராஜு ஜெயமோகன்.விஜய் டிவியில் எவர்கிரீன் தொடரான 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமான ராஜூ ஜெயமோகன் அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2 , நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் தோன்றி சின்னத்திரை மக்களின் மனதில் இடம் பிடித்தார். அவரின் டைமிங் காமெடி சென்ஸ் அனைவரும் அறிந்ததே!
நடிகர் கவின் உடன் 'நட்புன்னா என்னனு தெரியுமா" , "டான்", "முருங்கக்காய் சிப்ஸ்" உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். ராஜூவுக்கு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்தது 'பிக் பாஸ் சீன் 5'. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தொடக்கம் முதல் இறுதி வரை சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் பெற்று, அந்த சீசன் டைட்டில் வின்னரானார். அதன் தொடர்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜூ வூட்ல பார்ட்டி’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது என்ற அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால் படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஹீரோ அறிமுகம்
ஆனால் தற்போது அந்தக் கனவு நினைவாகி உள்ளது. Rain of Arrows Entertainemt நிறுவனத்தின் கீழ் சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் ஏற்கனவே 'எண்ணித்துணிக' என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராகவ் மிர்தாத் தான் ராஜூ அறிமுகமாகும் இப்படத்தை இயக்க உள்ளார். 'சைஸ் ஜீரோ' படத்தின் வசனங்களையும், தேசிய விருது பெற்ற 'பாரம்' படத்தை திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவர் ராகவ் மிர்தாத் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராஜூ ஜெயமோகன் ஜோடியாக பவ்யா திரிகா நடிக்கும் இப்படம் இன்றைய Gen Z தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை கலந்த ட்ராமாவாக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு 'பன் பட்டர் ஜாம்' என தலைப்பிடப்பட்டுள்ளது. சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, வி.ஜே. பப்பு, மைக்கேல் தங்கதுரை, சார்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இன்றைய தலைமுறை கதை
இன்றைய Gen Z பற்றின கதை தான் 'பன் பட்டர் ஜாம்'. இதன் மூலம் ஒருவனுக்கு எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அந்தந்த கனத்தை முழுமையாக வாழ பழகி கொள்ள வேண்டும் என பாசிட்டிவான கருத்தை நகைச்சுவை கலந்து சொல்லபட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியான இந்த ஃபீல் குட் பேமிலி என்டர்டெயின்மென்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் ஜூலை 8ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.