மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தென்னிந்திய சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக்கி ஆண்டுதோறும் வளர்ச்சி மேல் வளர்ச்சி அடைந்து வருகிறது கேரள திரையுலகம். இந்த திரையுலகில் உள்ள பிரபலங்களுக்கான அமைப்பாக “அம்மா” உள்ளது. தமிழ் சினிமா பிரபலங்களுக்கு எப்படி தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளதோ, அதேபோல் கேரள பிரபலங்களுக்கு அம்மா உள்ளது.  இந்த சங்கத்துக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 


இதில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவேல பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு செய்யப்பட்டு செயலாற்றி வந்தனர். ஆனால் மோகன்லால் தலைமையில் அம்மா சங்கத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் மலையாள திரையுலகினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது பெரும் பிரச்சினையை உண்டாக்கியது. 


நடிகர் மோகன்லாலை நடிகைகள் பலரும் வெளிப்படையாக கண்டித்தனர். இதன் எதிர்ப்பு நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டங்களிலும் எதிரொலித்தது. இதனால் தொடர்ந்து நடிகர் சங்க பொறுப்பில் தொடர விரும்பாமல் பதவிக்காலம் முடியும் முன்பே மோகன்லால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதேசமயம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சங்கத்தில் தேர்தல் நடைபெறும். அந்த வகையில் ஜூன் 3 ஆம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மோகன்லால் ராஜினாமா செய்யவுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 29 ஆண்டுகளாக நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் எடவேல பாபுவும் ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. 


மொத்தம் 506 உறுப்பினர்கள் சங்கத்தில் உள்ளனர். ஜூன் 30 ஆம் தேதி அம்மா சங்கத்தின் பொதுக்குழு கூடும் நிலையில் இந்த ராஜினாமா விலகுதல் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மோகன்லால் சினிமா பயணம் 


மலையாளத்தில் கம்ப்ளீட் ஆக்டர் என அழைக்கப்படுபவர் மோகன்லால். கிட்டதட்ட 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ள தமிழிலும் இருவர், சிறைச்சாலை,அரண், ஜில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் படம் வெளியான நிலையில் தற்போது மோகன்லால், பெரோஸ், கண்ணப்பா, ராம் பாகம் 1, எம்புரான், விருஷபா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.