விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலமானவர்களாக மாறிய பலர் உள்ளனர். அப்படி மிகப் பெரிய செலிபிரிட்டியாக வலம் வந்தவர் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ். இறுதிக்கட்ட மேடை வரை நெருங்கினாலும் அவரால் பிக் பாஸ் டைட்டிலை பெறமுடியவில்லை. இருப்பினும் இரண்டாவது இடத்தை பிடித்தார். 


 




ஆனால் அதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு வாய்ப்புகள் மளமளவென குவியும் என எதிர்பார்த்தவர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் பெறவில்லை. ஒரு சில விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 


நேற்று பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் மணமகன் கோலத்தில் மணமேடையில் இருக்கும்படி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு மாத காலம் முடிந்த போய்விட்டது என குறிப்பிட்டு ரசிகர்களிடம் திருமணம் பற்றி தெரிவிக்காததற்கு மன்னிப்பு கோரினார். பாலாஜியின் இந்த போஸ்ட் பார்த்து அவன் ரசிகர்கள் பயங்கரமாக ஷாக் ஆனார்கள்.


இன்று பாலாஜி முருகதாஸ் தன்னுடைய திருமண வீடியோவை ரசிகர்களின் வேண்டுகோளின் படி பகிர்கிறேன் என சொல்லி கையில் தாலியை வைத்திருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் இது ஏதாவது படம் அல்லது விளம்பரத்திற்காக எடுத்த வீடியோவாக இருக்கும் என ஒரு சிலர் யூகித்து இருந்தாலும், ஒரு சிலரோ உண்மையிலேயே அவரின் திருமணம் முடிந்துவிட்டது என்று நம்பினார்கள். 


 






 


இந்நிலையில், இது ஒரு விளம்பரத்திற்காக எடுத்த வீடியோ தான் என்பதை உறுதி செய்த பாலாஜி முருகதாஸ், “ஏப்ரல் 1ம் தேதி ஏப்ரல் பூல் செய்வதற்காக இந்த திருமணம் முடிந்தது” என சொல்லி ஏமாற்றியுள்ளார். அவரின் இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் “நல்லா பிராங்க் பண்ணீங்க” என சொல்லியும் கோபத்துடனும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் என்னதான் விளம்பரத்திற்காக ஷூட்டிங் என்றாலும் தாலியை வைத்து விளையாடுவது தவறு என கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.