நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். பிரதீப் ஆண்டனி ரசிகர் என சொல்லி கொள்ளும் ஒரு நபர் என்னை கொடூரமாக தாக்கினார் என சொல்லி அடிபட்டு காயத்துடன் இருக்கும், போட்டோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்து பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் விமர்சனம் கொடுத்து விட்டு வீடு திரும்பும் போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 


 



பிக் பாஸ் விமர்சகர் : 


பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் விமர்சித்து வருகிறார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமார். இவர் கடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று சரியான கன்டென்ட் கொடுத்து கொளுத்தி போடும் வேலையை கச்சிதமாக செய்து வந்தார். அம்மாவை தொடர்ந்து வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். 


வனிதா மீது தாக்குதல் :


வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்யும் போது மகளுக்கு ஆதரவாகவே  பேசி வருவதாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டதை மனதில் வைத்து கொண்டு பல வாரங்களுக்கு பிறகு வனிதாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். வனிதா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது மனது பதைபதைக்கிறது. 


 



சனம் ஷெட்டி ட்வீட் :


முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகருமான சனம் ஷெட்டி, வனிதாவின் இந்த பரிதாப நிலை குறித்து போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த கோழைத்தமான கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற பல சங்கடங்களை நானும் சந்தித்துள்ளேன் சந்தித்தும் வருகிறேன். இந்த தாக்குதலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுங்கள். நிச்சயமாக இதற்கு காரணமானவன் கண்டுபிடிக்கப்படுவான். யாரோ ஒரு கொடூரமானவன் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் மீதும் பழி போட கூடாது என பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.  


அதற்கு "நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே. இதற்கு நான் இந்த தாக்குதலை ஏன் அனுபவிக்க வேண்டும்" என ட்வீட்  செய்துள்ளார் வனிதா. 


பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் :


பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் தான் தன்னை தாக்கினார்கள் என வனிதா குறிப்பிட்டு கூறியுள்ளதால் பிரதீப் ரசிகர்களுக்கு அவர் மீது பச்சாதாபம் எல்லாம் வந்துவிடவில்லை. வேறு ஏதோ ஒரு பிரச்சினையில்  முகத்தில் குத்து வாங்கிவிட்டு அந்த பழியை தூக்கி பிரதீப் ஆண்டனி மீது போடுகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் பிரதீப் ஆண்டனி ரசிகர்கள்.