கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தீப திருவிழா இன்று தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றி வழிபடும் அதே நேரத்தில் அனைவரின் வீட்டிலும் விளக்கேற்றுவார்கள். கார்த்திகை மாதம் என்பது வானில் தோன்றும் நட்சத்திரத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட மாதம். கார்த்திகை மாதத்தில் இந்நட்சத்திரக் கூட்டத்தை மாலை பொழுதில் பார்க்கலாம். அக்காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் ஒரு நாளையும், ஒரு நட்சத்திரத்தின் பெயர் கொண்டு அழைப்பார்கள்.




கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரசித்தி பெற்றதால் அது, மாதத்தின் பெயராக இடம் பெற்றது. கார் என்றால் மேகம், மழை, இருளைக் குறிக்கும். திகை என்றால் திசையைக் குறிக்கும். இதனை ஒப்பிட்டு இதற்கு இப்பெயரை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கார்த்திகை தினத்தில் மாவொளி சுத்தும் வழக்கம் தமிழர்களிடையே இருந்து வருகிறது. கார்த்திகை மாதத்தில் பனை மரத்தின் பூவை எரித்து, அதன் கரியை தூளாக நுணுக்கி ஒரு துணி பையில் போட்டுத் தைப்பார்கள். தைக்கப்பட்ட பை மீது, சிறிது சாணம் பூசி காயவைத்து, பனை மட்டையை நான்காக கிழித்து அதன் நடுவில் வைத்துக் கட்டுவார்கள். அந்த மட்டையின் மேல் நுனியில் ஒரு கயிறைக் கட்டிக்கொண்டும், மறுநுனியில் உள்ள பொட்டணப் பை மேல் நெருப்பு கனுங்குகளை வைத்து சுற்றுவார்கள்.




அக்காலத்தில் உடம்பில் உடுத்திக்கொள்வதே கிழிந்த துணிகளைத்தான். அப்படி ஒரு சூழலில் சிறுவர்கள் இதற்குப் பை தயார் செய்வது என்பதே மிகவும் சவாலான செயலாக இருந்தது. பைகள் கிடைக்காதவர்கள் முத்திய பீர்க்கங்காய் குடிவையில் கரித்தூளை அடைத்து அதன் நுனியில் கயிறு கட்டி சுற்றுவார்கள். பார்ப்பதற்கு பலநூறு கம்பி மத்தாப்புகளை ஒன்று சேர்த்து சுற்றுவது போல் தீப்பொறி அவர்களைச்சுற்றி சுழன்று வரும். இதற்கு மாவொளி, சுளுந்து, கார்த்திகை பை என பல பெயர்கள் உள்ளது. இன்றளவும் சில ஊர்களில் இது புழக்கத்தில் உள்ளது. சில ஊர்களில் மாவொளிக்கு பதில் சைக்கிள் டயர்களை எரித்துச் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றனர். பல ஊர்களில் மாவொளியா அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவிற்கு இக்காலத்து சிறுவர்களை பப்ஜி கேம் விளையாட வைத்தும், பெப்சி குளிர்பானம் குடிக்கவைத்தும் வளர்த்துள்ளனர்.




தீபாவளி என்ற ஒரு பண்டிகையைத் தமிழர்கள் கொண்டாடுவதற்கு முன்பே சுளுந்து என்ற மத்தாப்பை சுற்றி தீப ஒளித்திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அது தெரியாத பலர் தீபாவளி பண்டிகைக்கு தமிழில் பெயர் வைத்துள்ளனர் என தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் என பண்டிகையின் பெயரையே மாற்றிவிட்டனர். ஒவ்வொரு ஊர்களில் இந்தப் பண்டிகைக்கு ஒவ்வொரு விதமான முக்கியத்துவம் உள்ளது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபம் இன்று வரை பிரசித்தி பெற்றதாக உள்ளது. அதேபோன்று பல ஊர்களில் உள்ள கோயில்கள் முன்பு விறகுகளை கூம்புபோல் அடுக்கி வைத்து எரிப்பார்கள். விறகுகள் எரியும்போதே அதை எடுத்துக்கொண்டு வட்டம் அடிப்பார்கள். இந்த விறகு குச்சிகள் மூலம் காய்கறிப் பந்தல் வைத்தால் நன்கு விளைச்சல் வரும் என்று பலரும் நம்பி குச்சிகள் மூலம் பந்தல் காய்கறிகளை வளர்ப்பார்கள்.




கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு  பனை மரத்தின் பூ எரிக்கப்பட்டு கரியை நுனுக்கி பனை மட்டையில் வைத்து செய்யப்பட்ட மாவொளியை சுற்றுவதன் மூலம் மத்தாப்பு போன்று பொறிகள் கொட்டும். இதன் மூலம் துன்பம் எல்லாம் கொட்டி தீர்ந்து இன்பம் ஒளியாய் ஒளிரும் என்பது ஐதீகம். இதனால் தீபத்திருநாளில் வீடுகளில் விளக்குகள் ஏற்றுவது மட்டுமில்லாமல் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் மாவொளியை சுற்றி மகிழ்ச்சியுடன் கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாடுவது வழக்கம். கார்த்திகை தீபத்திருநாளில் சுற்றப்படும் இந்த மாவொளியானது பல்வேறு மாவட்டங்களில்  தற்போது பலருக்குத் தெரியாத நிலையில், ஒரு சில கிராமங்களில் மட்டுமே இந்த மாவொளி கார்த்திகை தீபத்திருநாளில் தயாரிக்கப்பட்டு சுற்றப்பட்டு வருகிறது. 




பல நன்மைகள் கொண்ட பனை எங்கள் தினை என்று நாம் மறந்து போன பனையின் பயனில் ஒன்றான புகையில்லாத ஆபத்து இல்லாத சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பனையின் பொருளில் தயார் செய்யப்பட்ட மாவொளியை சுற்றி மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கானக மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் தயார் செய்யப்பட்ட மாவொளியை  சுற்றும் நிகழ்வு நடைபெற்றது. இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் தீபாவளி மத்தாப்பு போன்று மத்தாப்பு பொறிகள் பறக்க சிறுவர்கள் பெண்கள் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் இந்த மாவொளியை சுற்றி மகிழ்ந்தனர்.  2கே கிட்சுகள் ஆர்வமுடன்  மாவொளியை சுற்றி அதிசயத்துடன் சுற்றி மகிழ்ந்தனர்.