பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரான மாயா கிருஷ்ணன் மீது பிரபல மாடல் அளித்த பழைய புகார் ஒன்று மீண்டும் இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவதால் இணையதளத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி இருக்கிறது. பிற சீசன்களைப் போல் இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பல்வேறு பின்ன்ணிகளைக் கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை மற்றூம் நாடகக் கலைஞர் மாயா கிருஷ்ணன், வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா , அருவி வாழ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ராப் பாடகர் நிக்ஸன் , யூடியூப் பிரபலமான பூர்ணிமா ரவி உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டிகளைத் தொடங்கியுள்ளார்கள்.
மோதல் ஆரம்பம்
இதற்கு முந்தைய வருடங்களைப் போல் இல்லாமல் இந்த வருடம் பல்வேறு புதிய மாற்றங்கள் பிக் பாஸ் வீட்டில் செய்திருக்கிறார்கள். பிக் பாஸ் வீடு , ஸ்மால் பாஸ் வீடு என இரு வீடுகள் போட்டியாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. மேலும் வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வந்துள்ளதால் போட்டியாளர்களுக்கு இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் தொடங்கிவிட்டன. இந்த போட்டியாளர்களில் யார் மக்களின் வாக்கைப் பெற்று அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லப் போகிறார்கள் என்பதுதான் இவர்களுக்கு இருக்கும் சவால்.
மாயா கிருஷ்ணன்
பிக்பாஸ் வீட்டில் புகழ்பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மாயா கிருஷ்ணன். 2015 ஆம் ஆண்டு வானவில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய மாயா கிருஷ்ணன் மேடை நாடகப் பின்ன்ணியில் இருந்து வருபவர். மேலும் தனுஷ் நடித்த தொடர், ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் மாயா கிருஷ்ணன். விக்ரம் படத்தில் இவர் நடித்த பாலியல் தொழிலாளி கதாபாத்திரம் ரசிகர்களிடம் புகழ்பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சவால் விடும் ஒரு போட்டியாளராக வந்து நிற்கிறார் மாயா. மக்களின் முன் மாயா கிருஷ்ணன் ஆதரவு பெற்று வரும் நிலையில் அவரது கடந்த கால சர்ச்சை ஒன்று அவரது வெற்றிப் பயணத்தில் மீண்டும் குறுக்கிட்டுள்ளது.
என்ன சர்ச்சை
கடந்த 2018 ஆம் ஆண்டு மாயா கிருஷ்ணன் மீது மாடல் மற்றும் நடிகையான அனன்யா ராம்பிரசாத் புகார் ஒன்றை அளித்தார் அந்த புகாரில் “நடிகை மாயா கிருஷ்ணன் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் அவரை கடந்த 2016-ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 18 . மாயா எனக்கு வழிகாட்டியாக இருந்து பல்வேறு ஆசோசனைகளை வழங்கியதால் நான் அவரை நம்ப ஆரம்பித்தேன். அடுத்த சில மாதங்களில் நாங்கள் இருவரும் நெருக்கமாக பழகினோம். ஒரு கட்டத்திற்கு மேல் என்னுடைய எல்லா முடிவுகளையும் மாயாவே எடுக்க ஆரம்பித்தார். நான் அவருடன் மட்டுமே பழகவேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட ஆரம்பித்தார். என்னுடைய நண்பர்களுடனான என்னுடைய உறவைத் துண்டித்து அவர்கள் என்னை வெறுக்க செய்தார். என் பெற்றோரையும் ஒதுக்க வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக என்மீது ஆதிக்கம் செலுத்தினார். ”
தன்னம்பிக்கையை இழக்கத் துவங்கினேன்
”நான் தன்னம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழக்கத் துவங்கினேன் என் வாழ்க்கை முழுவது ஆக்கிரமித்தார் மாயா. என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவருடன் ஒரே அறையில் ஒரே மெத்தையில் தூங்குவது சாதாரணமானது. என்னை பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார். ஒரு கட்டத்தில் தவறாக சிக்கியதை நான் உணர்ந்தேன். பின்பு அதில் இருந்து மீண்டு மனநல மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றேன்” என்று மாயா கிருஷ்ணன் மீது அனன்யா புகாரளித்துள்ளார்.
மாயா கிருஷ்ணன் விளக்கம்
மாயா கிருஷ்ணன் அளித்த விளக்கத்தில் அனன்யா தன்மீது அளித்துள்ள புகார் எல்லாம் பொய் என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அதற்கு தான் முழு ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.