விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இதுவரையில் ஒளிபரப்பான மற்ற சீசன்களையும்  விட ஏழாவது சீசன் படு விறுவிறுப்பாக இருந்தது. வீட்டுக்குள் நுழைந்த பெரும்பாலான போட்டியாளர்கள் பக்காவாக பிளான் போட்டு அவரவர்களின் ஸ்டேடர்ஜியுடன் தாறுமாறாக விளையாடினார்கள். பிரதீப் ஆண்டனி, மாயா, அர்ச்சனா, விசித்திரா, ஜோவிகா, விஷ்ணு, தினேஷ் என பல வில்லங்கமான போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டு கொண்டனர்.


 




பிக் பாஸ் ஏழாவது சீசன் துவங்கிய நாள் முதல் பிரதீப் ஆண்டனி தான் டைட்டில் வின்னராக வருவார் என வீட்டுக்கு உள்ளேயும் வெளியிலும் பல கணிப்புகள் இருந்தன. ஆனால் அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிளான் பண்ணி ரெட் கார்டு கொடுக்க வைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார்கள் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 


இது குறித்து பிரதீப் ஆண்டனியிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்கப்படவில்லை. பலரின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்தார் பிரதீப் ஆண்டனி. இது குறித்து அவர் சோசியல் மீடியாவில் வெளிப்படையாக போஸ்ட் பகிர்ந்தும் எந்த ஒரு நடவடிக்கையோ அல்லது விசாரணையோ எடுக்கப்படவில்லை.  இருப்பினும் இயக்குநராக வேண்டும் என்ற அவரின் தீராத தாகத்தை நோக்கி அவர் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இடையிடையில் அவருக்கு வரும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரதீப் ஆண்டனியின் நண்பரும் நடிகருமான கவின் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற 'டாடா' படத்தில் ஒரு  சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீப் ஆண்டனி. 


 







தற்போது பிரதீப் ஆண்டனி ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அவருக்கு நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொள்ள உள்ளார். நேற்று நடந்து முடிந்த இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.  தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "பேமிலி மேன். எனக்கெல்லாம்  நடக்காதுன்னு நினச்சேன். பரவில்லை பொண்ணு கொடுக்குறாங்க என்னை நம்பி. 90ஸ் கிட்ஸ் சாதனைகள்" என கேப்ஷன் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களும் வாழ்த்துக்களும் மளமளவென குவிந்து வருவதும் ஹார்ட்டின்கள் சிதறுகின்றன. விரைவில் திருமண நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.