பிக்பாஸ் சீசன் 7


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மொத்தம் 106  நாட்கள் நடைபெற்றது. பல்வேறு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, என்டர்டெயின்மெண்ட், சர்ச்சைகள் எனத் தொடர்ந்தது. கூடுதலாக வைல்டு கார்ட் ரவுண்டில் மேலும் சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த அர்ச்சனா இந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தைத் தட்டிச் சென்றார். 


விமர்சனங்கள் 


இறுதியா தினேஷ், மணி, மாயா, விஷ்ணு, அர்ச்சனா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் ஃபைனலில் வந்து சேர்ந்தார்கள். இந்த ஐந்து நபர்களில் அர்ச்சனா அதிக வாக்குகள் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. கூடுதலாக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தார்.


கமல்ஹாசன் தோற்றுவிட்டதாகவும் அர்ச்சனாவை வெற்றியாளராக தேர்வு செய்தது ஒற்றைச் சார்புடைய முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் மாயா கிருஷ்ணன் மாதிரியான தகுந்த போட்டியாளர்கள் இருந்தும், அவர்களை விடுத்து அர்ச்சனாவை தேர்வு செய்தது குறித்து அவர் விமர்சித்திருந்தார். பணம், மற்றும் ப்ரோமோஷன்களில் மூலமாக அர்ச்சனாவுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளதாக வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.


அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த மாயா கிருஷ்ணன் 


இப்படியான நிலையில் அர்ச்சனாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. பிக்பாஸ் வீட்டில்  நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி அர்ச்சனா தைரியமாகப் பேசியதே மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த ஆதரவுக்கு காரணம் என்று அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில், மாயா கிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் அர்ச்சனாவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.






தனது எக்ஸ் பக்கத்தில் மாயா கிருஷணன்  ‘ டியர் அர்ச்சனா..டைட்டில் வின் பண்ணதுக்கு என்னோட வாழ்த்துகள். நீ நெனச்ச மாதிரி உன் வாழ்க்கையில பூ பூக்கும். செடி வாடிப்போற மாதிரி இருந்தா என்ன கூப்டு, நான் வந்து தண்ணி ஊத்தறேன். நான் முன்னாடியே சொன்ன மாதிரி நான் எப்போவும் உன்கூட இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.