விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கு பெற்று, நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறியவர் ராஜூ ஜெயமோகன். இவரது இரண்டு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அது ராஜூ தனது குருக்களான பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலீப் குமாரை சந்தித்த புகைப்படங்கள். முன்னதாக பாக்யராஜின் உதவி இயக்குநராக ராஜூ பணியாற்றிய நிலையில் அவரையும், விஜய் டிவியில் நெல்சன் திலீப் குமாரின் கீழ் பணியாற்றிய நிலையில் அவரையும் மரியாதை நிமித்தமாக தனது பிக்பாஸ் கோப்பையுடன் ராஜூ சந்தித்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள அவர், “ இந்த பூமியில் மிக சிறந்த பரிசு என்னவென்றால், அறிவு நிரம்பிய ஆசிரியர்கள் நமது வாழ்கையில் ஒருமுறை அமைவது. இது மிக அரிதான நிகழ்வு. அதுதான் உச்சக்கட்ட ஆரம்பரம்” என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் கேட்டு சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
பிக்பாஸ் ராஜூவின் கதை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் ராஜூ வெற்றி பெற்றுள்ளார். தொடக்கம் முதலே அவர்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ராஜூ வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர், திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்ட ராஜூ பிறந்தது திருநெல்வேலி ஆகும். ஆனால், அவர் வளர்ந்தது அனைத்தும் சென்னை ஆகும். 1991ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி பிறந்த ராஜூ விஸ்காம் ஸ்டூடண்ட் ஆவார். சென்னையில் வளர்ந்த அவர் கோவையில் உள்ள பிரபலமான கல்லூரியில் படித்தார். படிக்கும்போது இருந்தே சினிமா மீது தீராத மோகம் கொண்டவராகவே ராஜூ இருந்தார்.