பிக்பாஸ் வீட்டில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட ஐக்கி பெர்ரி, தனது போட்டியளர்களின் வீட்டிற்கு சென்று வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி, நமீதா ஆகியோரின் வீட்டிற்கு சென்ற ஐக்கி பெர்ரி தற்போது வருண் வீட்டிற்கும் சென்றார். அது தொடர்பான வீடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தார்.
அந்த வீடியோவில், வருணின் அம்மா, அப்பா, அண்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வருண் அம்மாவை பார்த்து, இவரா வருண் அம்மா, இவரை நாங்கள் முன்னமே பார்த்திருக்கிறோமே என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஆம்.. வருண் அம்மாவை உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. காரணம் அவர் பல டிவி நிகழ்ச்சிகளில் அழகு குறிப்புகளை வழங்கியிருக்கிறார். வருணின் அம்மா பெயர் மஹா. இவர் பிரபல அழகுகலை நிபுணர் ஆவார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சரும், நடிகருமான ஐசரி வேலனின் மகள் ஆவார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அழகு கலை துறையில் இருக்கும் மஹாவிற்கு அந்தத் துறையில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது அப்பா. ஒவ்வொரு நாளும் விதவிதமான மேக்கப் போட்டுக் கொண்டு வரும் அப்பாவால் அவர் ஈர்க்கப்பட்டுள்ளார்.
அழகுகலை துறையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மஹா, பல நாடுகளுக்கு சென்று இது குறித்தான அறிவை வளர்த்துள்ளார். தற்போது மஹா பியூட்டி டிரெய்னிங் அகாடமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார். இதில் 20,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இது மட்டுமல்ல மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை முன்னிட்டு 484.5 மீ நீளத்தில் இளஞ்சிவப்பு முடியை சடை செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். முன்னதாக, இவரை ஒரு பியூட்டிசனாக மட்டுமே அறிந்து வைத்திருந்த மக்கள் தற்போது அவர் வருணின் அம்மா என்பதையும் தெரிந்திருக்கின்றனர்.