விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரு வாரத்தில், வெற்றி பெறப்போகும் போட்டியாளர் யார் என்பது தெரிந்து விடும். கடைசி கட்ட பந்தயத்தில் ராஜூ, ப்ரியங்கா, சிபி, தாமரை, அமீர், பாவனி ஆகியோர் களத்தில் உள்ளனர். இதில் அமீர், ப்னாளே டிக்கெட் வாங்கிக் கொண்டு, இறுதி போட்டிக்கு முதல் போட்டியாளராக தேர்வாகி விட்டார். வரும் வாரத்தில், இறுதி போட்டியாளர்கள் இன்னும் தேர்வாக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், போட்டியின் முக்கிய வாரமாக பார்க்கப்படும், பணப்பரிசு வாய்ப்பு தரும் டாஸ்க் நேற்று தொடங்கியது. குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் காண்பித்து, வேண்டுமானால், அந்த தொகையுடன் நீங்கள் வெளியேறலாம் என்பதே அந்த டாஸ்க். ஏலம் போல அந்த தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதை தேர்வு செய்வதும், நிராகரிப்பதும், போட்டியாளர் முடிவு.
இந்த சீசனுக்கான டாஸ்க், நேற்று தொடங்கியது. இந்தமுறை புதிய யுக்தியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள பரம்பரா வெப்சீரிஸ் பிரமோஷனுக்காக அதில் நடித்த நடிகர் சரத்குமாரை, களத்தில் இறக்கியது விஜய் டிவி நிர்வாகம். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சரத்குமார் அன்பே சிவம் கமல் போல ஆடை அணிந்து வந்தார்.
அவர் அணிந்து வந்த ஆடையை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்தனர். கடந்த பிக்பாஸ் சீசனில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
அதற்கு முந்தைய சீசனில், கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். முந்தைய சீசன்களில் வெளியேறக் கொடுக்கப்படும் தொகை 5 லட்சமாக இருந்த நிலையில், இந்த முறை அந்தத் தொகை 3 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு சம்பளமாக 10 லட்சம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நடிகர் சரத்குமார் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் யார் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டது.