விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவனி. 


கணவரின் தற்கொலை :


சின்னத்திரை நடிகையாக பல சீரியல்களில் நடித்து வந்த பாவனி காதல் திருமணம் செய்து கொண்டு கணவரோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். திடீரென ஒரு நாள் அவரின் கணவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு நிலைகுலைந்து போன பாவனி, மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன தம்பி’ சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. 


 



ஓகே சொன்ன பாவனி :


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரின் உள்ளம் கவர் கள்ளியானார் பாவனி. அதே சீசனில் சக போட்டியாளராக கொரியோகிராபர் அமீர் கலந்து கொண்டார். பாவனி மீது இருந்த ஈர்ப்பால் நிகழ்ச்சியிலேயே தனது காதலை பாவனியிடம் வெளிப்படுத்தினார் அமீர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் நண்பர்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் பாவனியின் சம்மதம் பெறுவதற்காக பல தருணங்களில் காதலை வெளிப்படுத்தி ஒரு வழியாக பாவனியிடம் இருந்து ஓகே வாங்கினார் அமீர். 


 



என்னது பிரேக்கப்பா?


சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக வலம் வந்த அமீர் - பாவனி ஜோடி நடிகர் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படத்தில் ஜோடியாகவே நடித்திருந்தனர். சமீபத்தில் இன்ஸ்டகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பாவனி சொன்ன ஒரு விஷயம் அனைவருக்கும் ஷாக் கொடுத்தது. ரசிகர் ஒருவர் நீங்கள் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறீர்களா? என கேட்டதற்கு 'ம்ம்ம்' என பாவனி சொன்னதால் அமீருக்கும் பாவனிக்கும் இடையே பிரேக்கப்பாகிவிட்டதா என கேள்விகள் எழுந்தன. 


வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :


மிகவும் வைரலாக பகிரப்பட்ட இந்த செய்தியால் தங்களின் உறவு குறித்து தற்போது வெளிப்படையாக பதிலளித்து உள்ளனர் அமீர் - பாவனி. “நாங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம். பிரேக்கப் எல்லாம் செய்யவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.


துணிவு திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு பாவனிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருவதாகவும் அதனால் ஒரு வருடத்திற்கு பிறகு திருமணத்தை வைத்து கொள்ளலாம் என முடிவெடுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது சின்னத்திரை வட்டாரம்!