இந்தியாவின் அண்டை நாடுகளில் முக்கியமான நாடாக இருப்பது மாலத்தீவு. இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மத ரீதியாகவும் அந்நாட்டுடன் இணக்கமான உறவை  இந்தியா பேணி வருகிறது. இதனால், மாலத்தீவில் பல திட்டங்கள், இந்தியாவின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்தியாவுடன் நட்புறவை பாராட்டி வந்த அதிபர் சோலி தோல்வி:


இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை பேணி வந்த அதிபர் முகமது சோலி, மாலத்தீவு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முய்ஜு வெற்றி பெற்றுள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, 54 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார் முய்ஜு. அதேசமயம், தற்போதைய அதிபர் சோலிக்கு 46 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.


நேற்று நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில், 86 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. முதல் சுற்றில் 79.85 சதவிகித வாக்குகள் பதிவானது. மாலத்தீவு அதிபர் தேர்தலிலேயே பதிவான மிக குறைவான வாக்குகள் இதுதான். முதல் சுற்றில் குறைவான வாக்குகள் பதிவானதால் வெற்றியை தீர்மானிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்பட்து.


மாலத்தீவில் ஓங்குகிறதா சீனாவின் கை? 


ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவி வந்ததாலும் எதிர்க்கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாலும், மாலத்தீவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவரது பிரச்சாரமே, 'இந்தியாவே வெளியேறு' என்ற முழக்கத்தை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்டது. 


இந்தியாவை முன்னிலைப்படுத்தி கொள்கைகளை வகுப்பதாக அதிபர் சோலி மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு சுமத்தின. தற்போது வெற்றிபெற்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணியான மக்கள் தேசிய காங்கிரஸ் - மாலத்தீவு முற்போக்கு கட்சி, சீனாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.


புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள முகமது முய்ஜு, இந்தியாவுடனான உறவை முறித்து கொள்வார் என புவிசார் அரசியல் நிபணர்கள் கூறி வருகின்றனர்.


யார் இந்த முகமது முய்ஜு?


பிரிட்டனில் படித்து, கட்டிட பொறியியல் பட்டம் பெற்ற முகமது முய்ஜு, அப்துல்லா யாமீன் அரசாங்கத்தில் கட்டிடத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். ஊழல் வழக்கில் சிக்கி அப்துல்லா யாமீன் சிறையில் அடைக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக முகமது முய்ஜு அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.


அமைச்சராக முகமது முய்ஜு பதவி வகித்தபோது, மாலத்தீவு தலைநகர் மாலேயில் சீன நிதியுதவியுடன் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. மாலத்தீவின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக கூறியே முய்ஜு பிரச்சாரம் மேற்கொண்டார்.