பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமடைந்தவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான விக்ரமனுக்கு நம்பிக்கை நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.


விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின், சென்ற ஆறாவது சீசனில் கலந்துகொண்டு இரண்டாம் இடம்பிடித்தவர் விக்ரமன். இந்த சீசனில் அஸீம் டைட்டில் வென்றாலும் மக்கள் மனங்களை வென்று விக்ரமன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு அரசியல் கட்சி சார்ந்த நபராக விக்ரமன் முதன்முறையாகக் கலந்துகொண்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் தொகுப்பாளரான விக்ரமன், தனது பயணத்தை ஒரு ஊடகவியலாளராகவே தொடங்கினார். 


இந்நிலையில் விக்ரமனுக்கு கத்தாரில் நிகழ்ந்த ‘தமிழ்மகன் விருதுகள் 2023’ எனும் விருதுகள் வழங்கும் விழாவில் ‘நம்பிக்கை நாயகன் விருது’ வழங்கப்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள தமிழ் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த விருதுக்கு விக்ரமன் தேர்வான நிலையில், இந்த விழாவில் விக்ரமன் நேரில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டார்.




முன்னதாக விக்ரமன் மீது கிருபா முனுசாமி எனும் பெண் வழக்கறிஞர் ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 


விக்ரமன் தன்னைக் காதலித்து வந்தநிலையில் தன்னை சாதியரீதியாக திட்டி உளவியல்ரீதியாக தன்னை அச்சுறுத்தியதாகவும் புகார்களை முன்வைத்திருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பைக் கிளப்பியது


விக்ரமன் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். இதனிடையே தனக்கென தனி யூட்யூப் சேனல் ஒன்றைத் தொடங்கி நடத்தி வரும் விக்ரமன், முன்னதாக இதுகுறித்த அறிவிப்பை தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துகொண்ட சக போட்டியாளர்களான ராம், ஏடிகே, ஷிவின் ஆகியோருடன் இணைந்து தான் யூடியூப் சேனல் தொடங்கும் நோக்கத்தைப் பற்றியும், இந்த  அறிவிப்பை பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் வீடியோ ஒன்றையும் விக்ரமன் பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில் இந்த விருது பெற்றது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்து விக்ரமன் தன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


சென்ற பிக்பாஸ் சீசலில் சிறப்பாக விளையாடிய விக்ரமன், பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இரண்டாம் இடம் பிடித்தது பலரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 


தமிழ்நாடு தாண்டி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சியின் மூலம் விக்ரமன் பிரபலமானார். இந்நிலையில், விக்ரமன் தோற்றது பிக்பாஸின் வரலாற்றுப் பிழை, பாய்காட் விஜய் டிவி, தீமை தான் வெல்லும் என்றெல்லாம்  ஹாஷ் டாகுகள் பகிர்ந்து  சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்