கைதி படத்தின் இந்தி ரீ-மேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள நிலையில், அப்படத்தின் புது ட்ரைலர் வெளியாகியுள்ளது.


2019ஆம் ஆண்டு கார்த்தி ஹீரோவாக நடிக்க நரேன், அர்ஜுன்தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம், கைதி. ரிலீஸான சில நாட்களிலேயே மக்களின் பலத்த ஆதரவை பெற்ற கைதி படத்தை இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். இதில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார், அமலா பால், தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர். 


ட்ரைலர் வெளியீடு:


கைதி படத்தின் இந்தி ரீ-மேக் ஆன ‘போலா’ படத்தில் அஜய் தேவ்கன்தான் ஹீரோ. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இது மட்டுமன்றி, படத்தின் இயக்குனரும் இவரே. வழக்கமாக ரீ-மேக் கதைகளில், ஒரிஜினல் படத்திலிருந்து கதையின் கருவை மட்டுமே எடுத்து படமாக்குவர், காட்சிகளை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வர். அதே வழியைத்தான் போலா படமும் பின்பற்றுகிறது. 


 



உண்மையான கைதி கதையை போலவே இந்த கதையிலும் சிறை தண்டனை முடிந்து வீடு திரும்புபவராக வருகிறார், அஜய் தேவ்கன். இவருடன் சேர்ந்து பயணிக்கும் காவல் அதிகாரியாக தபு. இடையில், ரெமான்ஸிற்காக அமலா பாலை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள் பாேலும். 


இது கைதியின் கதைதானா..


தமிழில் கைதி படத்தின் வெற்றிக்கு காரணமே, அதன் விறுவிறுப்பான கதைக் களமும், காதல் கத்திரிக்காய் காட்டாத காட்சிகளினாலும்தான். அது மட்டுமன்றி, கைதி படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால், போலா படத்தின் கதைக்களம் அப்படியே தலைகீழ். இப்படத்தில், அமலா பாலிற்கும் அஜய் தேவ்கனிற்கும் இடையே சின்ன காதல் உள்ளது. ராய் லட்சுமி நடனமாடும் மசாலா பாடல் உள்ளது.


அதிகம் பேசாத அஜய் தேவ்கன் இந்த ட்ரைலரில் ஆங்காங்கே பஞ்ச் பேசுகிறார். கடலில் செல்லும் கப்பலை காட்டுகின்றனர், படம் ஒரு நாளுக்குள் நடக்கும் கதையா..அல்லது பல நாட்கள் நடக்கும் கதையா என்பது படம் வந்த பிறகுதான் தெரியும். போதாக் குறைக்கு அஜய்தேவ்கன் பறந்து பறந்து சூப்பர் ஹீரோவைப் போல சண்டை போடுகிறார்.. 


நெட்டிசன்களின் பிடியில் பாலிவுட்!


‘போலா’ படத்தின் ட்ரைலர், பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைத்தான் பெற்றுள்ளது. ஆனாலும், ஒரிஜினல் கைதி படத்தை பார்த்தவர்கள், அதை கொலை செய்யும் அளவிற்கு போலா படத்தின் ட்ரைலர் இருப்பதாக கூறிவருகின்றனர். பாலிவுட் படங்களில், கலர்ஃபுல்லாக இருக்கும் வகையில் பல அம்சங்கள் இணைக்கப்படும். உதாரணத்திற்கு காதல் காட்சிகள், மசாலா பாடல்கள் அற்ற பாடல்களே, பாலிவுட்டில் கம்மிதான். அதனால்தான் என்னவோ போலா படத்திலும் அதே பாணியைத் தொடர்கின்றனர். ரசிகர்களை கவருவதற்காக இப்படத்தை 3டியில் வேறு வெளியிட இருக்கின்றனர், போலா படக்குழுவினர். 




ரிலீஸ் எப்போது?


போலா படம், மார்ச் 30ஆம் தேதி வெளிவருகின்றது. ட்ரைலர் கொஞ்சம் அப்படி இப்படி என்றிருந்தாலும், ஒரு சில பாலிவுட் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸிற்காக பல நாட்களாக காத்துக்கொண்டுள்ளனர். அதிலும், அஜய் தேவ்கனின் வெறித்தனமான ரசிகர்கள் சிலர் ட்ரைலர் வெளியான சில மணிநேரங்களிலேயே அதை மில்லியன் வியூஸ்களுக்கு எடுத்து சென்றுள்ளனர். 


அபிஷேக் பச்சன் சிறப்பு தோற்றமா?


பிரபல பாலிவுட் நடிகரும், உலக அழகி ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் போலா படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருவதாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், ட்ரைலரில் எந்த சீனிலும் அவரது முகத்தை காணவில்லை. அபிஷேக் பச்சன், அஜய் தேவகனின் நல்ல நண்பர் என்பதால் அவர் கண்டிப்பாக இப்படத்தில் தோன்றி அனைவரைக்கும் சர்ப்ரைஸ் கொடுப்பார் என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.