இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பண்ணைபுரத்தில் நல்லடக்கம்
கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாடகி பவதாரிணி, நேற்று முன் தினம் மாலை உயிரிழந்தார். 47 வயதான பவதாரிணியின் இறப்பு தமிழ் திரையுலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பவதாரிணியின் ரசிகர்கள் எனத் தொடர்ந்து நேரிலும் இணையத்திலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையிலிருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள முருகேசன் தெருவில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நேற்று மாலை 5.30 மணிக்கு அவரது உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும், பல திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பவதாரிணியின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டது.
கண்ணீர் அஞ்சலி செலுத்திய ஊர் மக்கள்
பண்ணைபுரம், லோயர்கேம்ப், முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள குருவனூத்து பாலம் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் என அஞ்சலி செலுத்திய நிலையில், தொடர்ந்து அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
நேற்று மாலை “அன்பு மகளே” என இளையராஜா இணையத்தில் பகிர்ந்த பதிவு மனதை உலுக்கும்படி இருந்த நிலையில், மகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தனி விமானம் மூலம் இளையராஜா இன்று மதுரை வந்தடைந்தார். மேலும் பவதாரிணியின் சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பிள்ளைகளான வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வாசுகி பாஸ்கர் உள்ளிட்ட சொந்தங்களும் பண்ணைபுரத்துக்கு வந்தடைந்தனர். திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
தொடர்ந்து பவதாரிணியின் உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணியின் இசைப்பயணம்
தமிழ் சினிமாவில் சிறுவயதிலேயே பின்னணி பாடகியாக தன் பயணத்தைத் தொடங்கி, இன்று இசையமைப்பாளராக வலம் வரும் பவதாரிணி, தன் அப்பா இளையராஜாவைப் போலவே தனித்துவமான மனதை வருடும் தேன் குரலுக்கு சொந்தக்காரர். ‘ஆராவமுதே’ என ரமணர் பாடல் தொடங்கி, என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி குழந்தைப் பருவத்திலேயே ஈர்த்த பவதாரிணி, பாரதி படத்தில் இடம்பெற்ற ‘மயில் போல’ பாடலுக்காக தேசிய விருதை வென்றார்.
இது சங்கீதத் திருநாளாம், தவிக்கிறேன், ஆத்தாடி ஆத்தாடி, ஒளியிலே தெரிவது என பவதாரிணியின் மென்குரலில் அமைந்த பாடல்களின் வழி அவர் என்றென்றும் இசைப்பிரியர்களின் மனங்களில் குடியிருப்பார்.