இயக்குநர் இமயம் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ், தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் வெளியான 'தாஜ்மஹால்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், ஈரநிலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்திலும் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் நடிகராக அவரால் பெரிய அளவு ஜொலிக்க முடியவில்லை.


முயற்சி திருவினையாக்கும்:


 இருப்பினும் சோர்வு அடையாமல் வெளிநாட்டுக்கு சென்று இயக்குநருக்கான பிரத்யேகமான பயிற்சியை  பயின்று இன்று ஒரு இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். கிராமத்துக் காதலை ரசித்து சித்தரித்த அழிவில்லா காதல் படங்களை கொடுத்த ஜாம்பவான் பாரதிராஜாவின் மகனும், தனது முதல் படத்தில் கையாண்டுள்ளது ஒரு அழகான அழுத்தமான காதல் கதையை தான்.



கிராமத்து காதல் காவியம் :


 

ஷியாம் செல்வன், ரக்ஷனா என புதுமுகங்களை நாயகன் நாயகியாக அறிமுகமாகியுள்ள மனோஜ், தனது அப்பா பாரதிராஜாவையும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் உள்ளார்.

பாரதிராஜாவின் 50 ஆண்டுகால நண்பரான  இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிராமத்து காதல் என்றால் அதில் மண்வாசனையாக இளையராஜாவின் இசை தான் கனகச்சிதமான பொருத்தம். இந்த அருமையான கூட்டணியில் உருவான மார்கழி திங்கள் திரைப்படம் வரும் அக்டோபர் 20ம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அழுத்தமான காதல் கதை:


மகன் மனோஜ் குமார் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா தனது  கருத்தைத் தெரிவித்துள்ளார். "சில நேரங்களில் சில விஷயங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒன்று தான் மனோஜ் இயக்கியுள்ள மார்கழி திங்கள் படம்.

இத்தனை ஆண்டுகள் அனுபவத்தில் ஏராளமான திரைப்படங்களை இயக்கிய என்னாலேயே இப்படத்தின் பாரத்தை இறக்கி வைக்க முடியவில்லை. இன்றும் நான் அழுதுகொண்டு தான் இருக்கிறேன். தனது முதல் படத்திலேயே இத்தனை அழுத்தமான காதல் கதையை கொடுத்து இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய மகன் பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.


 


சினிமாவை தாண்டிய ஒரு வாழ்க்கையை மிக அழகாகக் காட்டியுள்ளான். அந்த ஹீரோயின் ஹீரோ என அனைவருமே மிகவும் அழகாக பங்களித்துள்ளனர். ஒரு வாழ்வியலை அழகாக படமாக்கி ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளார். ஒரு காதல் கதையை இந்த பிரேமுக்குள் கொடுக்க தெரிந்தவனுக்கு நிச்சயம் எந்த ஒரு சப்ஜெக்ட் கொடுத்தாலும் சிறப்பாக செய்ய முடியும்.

 

மகன் ஜெயித்துவிட்டான்!


முதல் படம் என்னுடைய மகன் எப்படி பண்ணி இருப்பானோ என பயம் இருந்தது. ஆனால் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்துள்ளான். நிச்சயம் அவன் ஒரு பெரிய இயக்குநராக வருவான். சுசீந்திரன், இளையராஜா, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் சேர்ந்து அற்புதமான ஒரு படத்தைக் கொடுத்துவிட்டார்கள்.

அவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சினிமாக்காரனா என்னையே அந்த கதையோடு ட்ட வைத்து படத்தை பார்த்து இந்த பாரதிராஜாவையே அழவைத்து விட்டான்" என தனது மகன் மனோஜ் பற்றியும் அவரின் அற்புதமான காதல் காவியத்தை பற்றியும் உச்சிமுகர்ந்து தன்னுடய கருத்தை தெரிவித்துள்ளார்.