தமிழ் சினிமாவின் ஒப்பில்லா கலைஞர், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 'என் இனிய தமிழ் மக்களே' என்ற கம்பீரமான குரலை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. பச்சைப்பசேல் சுற்றுப்புறத்தை முதன்முதலாக கேமராவுக்குள் அடக்கி அதை ட்ரெண்ட் செய்த பெருமைக்குரியவர். அவரின் ஒவ்வொரு படைப்பிலும் கருத்துள்ள ஒரு உணர்வுப்பூர்வமான கதைக்களம் இருக்கும். 



அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் அவர் இயக்கிய முதல் திரைப்படம்  தான் '16 வயதினிலே'.  கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, வடிவுக்கரசி நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இயக்குநர் பாரதிராஜாவின் ஸ்கிரீன்பிளே எத்தனை அற்புதமானது என்பதை அனைவரும் அறிவோம். அப்படி இருக்கையில் இன்று லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (LCU) என்பதை ரசிகர்கள் எந்த அளவிற்கு கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்த ட்ரெண்டை பாரதிராஜா 70-களிலேயே செய்துவிட்டார் என்பதுதான் ஆச்சரியம். அதற்கு ஒரு உதாரணமாக இந்த தொகுப்பை காணலாம். 



'16 வயதினிலே' திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் சாப்பானியாகவும், ஸ்ரீதேவி மயில் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சப்பானி, பரட்டையை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவார். ரயில்வே ஸ்டேஷனில் மயில் நின்று கொண்டு இருப்பாள். என்னைக்காவது ஒரு நாள் சப்பானி வருவார் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என நம்பிக்கையில் மயில் காத்திருப்பது போல படத்தை முடித்து இருப்பார் பாரதிராஜா. அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தெரியாது. அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பது தான் ரசிகர்களின் நம்பிக்கை. 



அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாரதிராஜா இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் 'கிழக்கே போகும் ரயில்". சுதாகர் மற்றும் ராதிகா ஹீரோ ஹீரோயினாக நடித்த இப்படத்தில் மொய் காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அதில் யார் யார் எவ்வளவு மொய் எழுதியது என்பது பற்றி அனைவரும் பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்போது பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பானி 5 ரூபாய் அப்படின்னு ஒரு டயலாக் வரும். 


முதல் படத்தில் மயிலும் சப்பானியும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? ஜெயிலுக்கு போன சப்பானி திரும்பி வந்தாரா இல்லையா என தெரியாமல் இருந்தது. ஆனால் அதை மிகவும் அழகாக தன்னுடைய இரண்டாவது படத்தில் அதற்கான விடையை அவ்வளவு சூட்சமமா, கதையோடு ஒத்துப்போகும் வகையில் அந்த காட்சியை வைத்து சினிமாட்டிக் யுனிவர்ஸ் லாஜிக்கை பயன்படுத்தி இருப்பார். 


'பெட்டிக்கடை மயில் புருஷன் சப்பானி 5 ரூபாய்' என்பது மூலம் சப்பானி திரும்பி வந்து மயிலை கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக  வாழ்கிறார்கள் என்றும் அவர்கள் பெட்டிக்கடை ஒன்று வைத்து மொய் எழுத முடியும் அளவுக்கு நல்ல நிலையிலும் இருக்கிறார்கள் என்பதை தன்னுடைய அடுத்த படத்திலேயே காட்டினார். இது தான் பாரதிராஜாவின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.