முண்டாசு கவிஞன் பாரதியை பற்றி இங்கு முன்னுரையோ, முகப்புரையோ தேவையில்லை. பாடப்புத்தகத்திலிருந்து பரிட்சையமானவர் அவர். ஆனாலும், பாரதியை திரை வழியே கொண்டு வர 2000 ம் ஆண்டு வரை காத்திருக்கவே நேர்ந்தது. அதற்கு முன், பாடல்கள், காட்சிகளில் கெஸ்ட் ரோலுக்கு அழைத்து வரப்பட்ட சுப்பிரமணிய பாரதியாரை, அவரது சுயசரிதை மூலம், முழுமையாக அழைத்து வந்தது, பாரதி படம் மூலம் தான்.


சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் கவிஞராக மாறியதும், கவிஞனானதால் அவர் பட்ட சிரமங்களும், அவர் குடும்பத்தாரின் சூழ்நிலைகளும் படிக்கும் போதே பகிர் என இருக்கும், காட்சியாக பார்த்தால்? உண்மையில் நெஞ்சம் கொதிக்கும்.



கோபம்... கோபம்... கோபம்... என சமூகத்தில் தான் கண்ட கொடுமைகளுக்கு எல்லாம் தன் கோபத்தை எழுத்துக்களால் எடுத்துரைத்த பாரதியாரின் கதாபாத்திரத்திற்கு அப்போது பீக் வில்லனாக இருந்த சாயாஷி ஷிண்டே தேர்வானது, பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. செல்லம்மா கதாபாத்திரத்திற்கு சுபலட்சுமியை தேர்வு செய்ய, அவரோ, தனக்கு விருப்பமில்லை என்று கூறி விலகிவிட்டார்.


அதன் பின் தேவயானியை தேர்வு செய்து, அவரை செல்லம்மா ஆக்கினர். ஞான ராஜசேகரன் எழுதி இயக்கிய பாரதி திரைப்படத்தை, மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்தது. அப்போது, ஒன்றரை கோடி ரூபாய் செலவில் தயாரானது பாரதி. தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், இசைஞானி இளையராஜாவின் இசையும் படத்தை வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. 



149 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம், ஒரு புரட்சிக்கவிஞனின் உண்மை கதையை தழுவியது. நாம் புரட்சியாளர்கை கொண்டாடும் அளவிற்கு, அவர்களின் படைப்புகளை கொண்டாடுவதில்லை. பாரதி படமும் அப்படி தான். மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங், இந்த படத்திற்கு இல்லை. அதே நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து பார்க்க அரசு அனுமதி அளித்ததால், பள்ளிகள் படையெடுத்து, தியேட்டரை நிரப்பின. 


தன் கவிதைகளால் இந்த சமூகத்திற்கும், விடுதலைக்கும் வித்திட்ட மகாகவி பாரதியாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, பள்ளி மாணவர்களின் முயற்சியால் படம் நல்ல வசூலை ஈட்டியது. இன்றும் பாரதியின் பிறந்தநாள், நினைவு நாள் அல்லது சுதந்திரதினம், குடியரசு தினங்களில் பாரதி திரைப்படம் ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பாகிறது. 



கவிஞர்களுக்கு வறுமை புதிதல்ல. ஆனால் தான் வாடிய போதும், தன் நிலையை வாட விடாமல், தன் மூச்சின் இறுதி வரை இந்த தாய் பூமிக்காக குரல் கொடுத்த பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை, நாம் கண்ணீர் சிந்தி பார்க்கும் அளவிற்கு ஒரு அரிய படைப்பாக தந்த வகையில், இன்றும் அது பொக்கிஷமாய் இருக்கிறது. எதிர்காலத்திற்கும் இது தேவையான இந்த படம், 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், வெளியானது. சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்று, தான் ஒரு சிறந்த படைப்பு என்பதையும் உறுதி செய்தது பாரதி திரைப்படம்!


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற