நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள மிரள் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 


ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிப்பில் M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பிரசாத் இசையமைத்துள்ள மிரஸ் படம் ஹாரர் - த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இதனிடையே பட வெளியீட்டை முன்னிட்டு  படக்குழு நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் பேசிய வாணி போஜன் இந்த படம் தனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்றும், ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்பணிப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் என்னுடன் இணைந்து நடித்த பரத் மிகச்சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது என கூறினார். 






தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இப்ப இருக்கிற ஜெனரேஷன் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தில் ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த படம் 20 நாளில் எடுத்த படம் மாதிரியே  இல்லை. ஒரு காட்சிக்கே அத்தனை ஷாட் வைத்து மிகப்பெரிய திட்டமிடலுடன் படத்தை இயக்குநர் தந்துள்ளார். நடிகர் பரத்தை எனக்கு பல காலமாக தெரியும். நல்ல உழைப்பாளி கதாப்பாத்திரம் புரிந்து மிக அழகாக நடித்துள்ளார். 


இதனையடுத்து பேசிய நடிகர் பரத் சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லிப்பாபு அனைவரையும் மதிக்க கூடிய ஒரு நபர். ஆகவே இந்த கதை பற்றியும், இயக்குனர் பற்றியும் நான் கூறிய போது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒத்துகொண்டார்.  இந்த படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமாருடனும், வாணி போஜனடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி.  இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை என தெரிவித்தார். இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.