நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த படம் சாயலில் ஒரு படம் வெளியானதே பலரும் அறியாத ஒன்று. அதைப்பற்றி நாம் காணலாம்.
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘ஆறுமுகம்’ என்ற படம் வெளியானது. தேவா இசையமைத்த இந்த படத்தில் பரத், பிரியாமணி, ரம்யா கிருஷ்ணன், சத்யா, கருணாஸ், சரண்யா மோகன் என பலரும் நடித்திருந்தனர். இந்த படம் பற்றி பார்ப்பதற்கு முன்னர் படத்தின் கதையை ஒருமுறை பார்த்து விடலாம்.
படத்தின் கதை
தந்தை இளவரசு, தங்கை சரண்யா மோகன், நண்பர் கருணாஸூடன் பிளாட்பாரத்தில் இட்லி கடை நடத்தி வருகிறார் பரத். அவருக்கு சிறு வயது தோழி பிரியாமணி மீது காதல் ஏற்படுகிறது. இதனிடையே பரத்துக்கு பணக்கார நண்பர் சத்யாவுடன் நட்பு உள்ளது. இதைக் கண்டு சத்யாவின் அக்கா ரம்யா கிருஷ்ணன், மாமா மகாதேவன் கடுப்பாகின்றனர். எப்படியாவது இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள். திட்டம் தீட்டி பரத் அம்மாவின் சமாதியை உடைக்கிறார். இதனால் டென்ஷனாகும் பரத், ரம்யாகிருஷ்ணனுக்கு எதிராக சபதம் எடுத்து பழிவாங்குகிறார். அவரது சொத்துகளை எல்லாம் வாங்கி எதிரிகளை வீதிக்கு வரவைக்கிறார். பின்னர் ரம்யாகிருஷ்ணன் திருந்த அவரது சொத்துகளை ஏலத்தில் எடுத்து திரும்ப தருவதே இப்படத்தின் கதையாகும்.
திட்டி தீர்த்த ரசிகர்கள்
கேட்பதற்கு அண்ணாமலை கதைப் போன்று இருக்கிறதா?.. அக்மார்க் அந்த கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ரசிகர்களுக்கு படம் காட்டியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. பரத் அண்ணாமலை ரஜினியையும், ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரியையும் ரெஃபரன்ஸ் எடுத்து நடித்திருந்தார்கள்.
இதனைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள் ரசிகர்கள். முதலில் ஏன் இந்த படத்தை இப்படி எடுத்தார்கள் என்பதே புரியாத புதிராக இருந்தது. ஆறுமுகம் ரிலீசாகி படுதோல்வி அடைந்தது. ஒரிஜினல் படத்தை ரீமேக் செய்யலாம். ஆனால் ஒரிஜினல் படத்தை எடுத்தவராலேயே அந்த படத்துக்கு இப்படி ஒரு பாதகத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் சரமாரியாக ரசிகர்கள் எழுப்பி சுரேஷ் கிருஷ்ணாவை திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.