நடிகர் பரத் மற்றும் நடிகை தமன்னா நடிப்பில் உருவான “கண்டேன் காதலை” படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்தி படத்தின் ரீமேக்
2007 ஆம் ஆண்டு பாலிவுட்டில் கரீனா கபூர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் நடிப்பில் ஜப் வீ மெட் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் தமிழ் ரீமேக் தான் கண்டேன் காதலை என்ற படமாக உருவானது. ஆர்.கண்ணன் இயக்கிய இப்படத்தில் பரத்,தமன்னா, சந்தானம் நிழல்கள் ரவி, தீபா வெங்கட், ரவிச்சந்திரன், அழகன் பெருமாள்,மனோபாலா,சிங்கமுத்து,தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ப்ளூ ஓசன் என்டர்டெயின்மென்ட் மற்றும் மோசர் பேர் நிறுவனம் தயாரித்த கண்டேன் காதலை படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
படத்தின் கதை
மிகப்பெரிய தொழிலதிபரான பரத் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு தொழிலில் நஷ்டம், அம்மா அவரை விட்டு விலகியதோடு பிசினஸில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தது என பல பிரச்சினைகளை எதிர் கொண்டு மன அழுத்தத்துடன் போராடுகிறார். அதே சமயம் அவரது காதலி வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ளும் நிலையில் பிரச்சனைகளிலிருந்து விடுபட தெரியாமல் சேருமிடம் தெரியாமல் ஒரு ரயிலில் ஏறுகிறார். அதே ரயிலில் பயணிக்கும் தமன்னாவை சந்தித்த நிலையில் இருவருக்குமான உறவு முதலில் மோதலில் தொடங்கி நட்பாக விரிவடைகிறது.
தமன்னாவின் துறுதுறு அணுகுமுறை மன அழுத்த பிரச்சனையிலிருந்து பரத்திற்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து தமன்னாவின் வீட்டுக்கு விருந்தினராக பரத் செல்கிறார். ஆனால் அங்கு தாய் மாமா சந்தானத்துடன் தமன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினருடன் திட்டமிடப்படுகிறது. இதனால் தன் காதலன் முன்னாவை தேடி பரத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனால் குடும்பத்தினர் தமன்னாவும் பரத்தும் காதலித்து வீட்டை விட்டு விட்டு வெளியேறியதாக நினைக்கின்றனர்.
இதற்கிடையில் மாதங்கள் பல கடந்து விட்ட நிலையில் ஒரு விளம்பரத்தில் பரத்தை பார்த்துவிட்டு தமன்னாவின் தந்தை நிழல்கள் ரவி அவரை சந்தித்து மகளை திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்கிறார். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய அன்றைய நாளிலேயே தமன்னாவை தான் பிரிந்ததாக பரத் அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் தமன்னாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்து விட்டு அவரை தேடி ஊட்டிக்கு புறப்பட்டு சென்றால் காதலுடன் சேராமல் தனிமையில் வாழ்க்கை கழித்து வருகிறார் தமன்னா.
வீட்டில் சொல்லி காதலன் முன்னாவுடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்துவிட்டு தமன்னா,முன்னாவோடு பரத் தேனிக்கு திரும்புகிறார்கள் ஆனால் முன்னாவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத தமன்னா பரத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர் மேல் காதல் கொள்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதை இப்படத்தின் கதையாகும்.
கூடுதல் தகவல்கள்
இந்தப் படத்தில் முதலில் பரத் மற்றும் தமன்னாவின் கேரக்டரில் நடிக்க நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ரேயா ஆகியோருடன் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இருவரும் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிசியாக இருந்தால் விலகினர். இதன் பின்னர் பரத் மற்றும் தமன்னா இப்படத்தில் இணைந்தனர். மிகப்பெரிய அளவில் இப்படம் தமன்னாவுக்கு திரும்பு முனையாக அமைந்தது.
அவரின் துறுதுறு நடிப்பும், வசன உச்சரிப்பும் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. மேலும் வித்யாசாகர் இசையில் பாடல்களும் பட்டையைக் கிளப்பின. குறிப்பாக வெண்பஞ்சு மேகம், சுத்துது சுத்துது, காற்று புதிதாய், ஓடோடி போறேன் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. ஜப் வி மேட் படத்தின் சாயலை முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதி ரசிகர்களை கவர்ந்திருந்தார் இயக்குனர் ஆர். கண்ணன். மேலும் சந்தானத்தின் மொக்க ராசு காமெடி இன்றும் அவரின் கேரியரின் ஒரு மைல்கல்லாகவே உள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rest In Peace Chandler: நடிகர் மேத்யு பெர்ரியின் மறைவு: ரசிகர்கள் எழுதிய நினைவு குறிப்புகள்!